திமுகவின் தர்மபுரி கிழக்கு மாவட்டம பொறுப்பாளர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மற்றொரு பிரமுகர் மாவட்ட பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வரும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த சில தினங்களாக பா.ஜ.க தி.மு.க இடையிலான மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல், புதிய கல்வி கொள்கை திட்டத்தை ஏற்காத தமிழகத்திற்கு நிதி இல்லைஎன்று மத்திய கல்வி அமைச்சர் கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இது குறித்து பா.ஜ.க -வை தமிழக மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் மத்திய அரசுக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், பா.ஜக. தரப்பில், அரசியல் பிரமுகர்கள் யார் யார் சி.பி.எஸ்.இ பள்ளிகள் நடத்துகிறார்கள் என்பது குறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மறுபக்கம், திமுகவுக்கு போட்டியாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் தொடர்ந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே 2026 சட்டசபை தேர்தலுக்கு தாயாராகும் வகையில், தி.மு.க.,வில் கடந்த சில நாட்களாக, புதிய மாவட்டங்கள் ஏற்படுத்துவது, ஏற்கனவே இருக்கும் மாவட்டங்களில் செயலாளர்களை மாற்றி விட்டு பொறுப்பாளர்களை நியமிப்பது போன்ற பணிகள் நடக்கின்றன. அந்த வகையில் தற்போது தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகப் பதவி வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியம் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தடங்கம் சுப்பிரமணியத்திற்கு பதிலாக, தருமபுரி கிழக்கு மாவட்டத்தின் புதிய பொறுப்பாளராக தர்ம செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த உத்தரவை திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பிறப்பித்துள்ளார். 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க, தி.மு.க முழுவீச்சில் தயாராகிவரும் நிலையில், இது போன்ற சில மாற்றங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது.