முதியோர் பாதுகாப்புக்கென தனிப்பிரிவு உருவாக்கப்பட உள்ளதாகவும், மகளிர் நலனுக்கென்று புதிய கொள்கை உருவாக்கப்பட உள்ளதாகவும் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் பாளையம்பட்டி ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘துளிர் உலகம்’ அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். இதையடுத்து மருங்குளத்தில் உள்ள மதர் தெரசா முதியோர் இல்லத்தைப் பார்வையிட்டு உரிய அடிப்படை வசதிகள் இருக்கின்றனவா என ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் தஞ்சையில் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மகளிர் நலனுக்கென்று புதிய கொள்கை உருவாக்கப்பட உள்ளது. இது தொடர்பாக கருத்துகள் கேட்டு வருகிறோம்.
முதியோர் பாதுகாப்புக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படும். பணிபுரியும் மகளிரின் பாதுகாப்பை உறுதி செய்ய 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லை ஏற்பட்டால் அதனை விசாரிக்க தனி குழு அமைக்கப்படும். விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 18 வயதுக்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவு செய்வது சட்டப்படி குற்றமாகும் என்று கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம.;எல.;ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“