தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். இதனால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. இன்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கிறார் என எதிர்பார்ப்பு.
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று தன் ஆதரவாளர்களுடன், திடீரென டில்லி புறப்பட்டு சென்றது, அரசியல் வட்டாரத்திலும் அதிமுகவினர் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்களை சந்திக்க இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இன்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ். இன்று சந்திக்கவுள்ளார் என கூறப்பட்டுள்ளது. மேலும் ராஜ்நாத் சிங்கையும் சந்திக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைவர் அமித் ஷாவை சந்திக்க அனுமதி கேட்டபோது ஓ.பி.எஸ்க்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நேற்று டெல்லி சென்றடைந்த துணை முதல்வர் ஓ.ப்.எஸ்.க்கு, மாநிலங்களவை எம்.பி. மைத்ரேயன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஓ.பி.எஸ். உடன் அவரது ஆதரவு குழுவில் இருந்த கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் என பலரும் டெல்லி சென்றுள்ளனர்.
கடந்த ஜூன் 18ம் தேதி நிர்மலா சீதாராமனை, மைத்ரேயன் தனியே சந்தித்து அதிமுக நிலவரம் குறித்து விவாதித்துள்ளார். எடப்பாடியின் சம்பந்தி சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் ஐ.டி. ரெய்டு நடைபெற்று முடிந்த வேளையில், தனது ஆதரவாளர்களுடன் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மத்திய அமைச்சரை சந்திக்கவிருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.