Advertisment

இ.பி.எஸ் எப்படி முதல்வரானார் என்ற டிராமாவை மக்கள் டி.வி-யில் பார்த்தார்கள் - உதயநிதி ஸ்டாலின்

சீனியர்களைத் தாண்டி எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது எல்லாம் மக்கள் அனைவருக்கும் தெரியும். மற்றவர்களை விமர்சனம் செய்வதற்கு முன்பு, அவரது நிலையையும் யோசித்துப் பேச வேண்டும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

author-image
WebDesk
New Update
Udhayanithi Stalin Deputy

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்திருந்த நிலையில், பல சீனியர்களைத் தாண்டி, கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது எப்படி என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisment

சமீபத்தில் சென்னையில் கனமழை பெய்தபோது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி, சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை கோரினார். அதற்கு உதயநிதி, இப்போது மழைநீர் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான் எனக் கூறினார்.

இதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "வெள்ளை அறிக்கை கேட்டால் முதிர்ச்சி இல்லாமல் பதில் அளிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அனுபவம் வாய்ந்த அமைச்சர்களுக்கு பதிலாக துணை முதல்வர் மட்டுமே வேலை செய்கிறார். அனுபவம் பெற்ற அமைச்சர்களின் அறிவுரைகளை கேட்காமல், உதயநிதியை முன்னிலைப்படுத்தவே தி.மு.க முயல்கிறது. குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறது," என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, உதயநிதிக்கு அனுபவம் கிடையாது என விமர்சனம் வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு என்னை பற்றி கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு. நான் பதவியேற்கும் போதே என் மீதான விமர்சனங்களை வரவேற்பதாக கூறியிருந்தேன். எதிர்க்கட்சித் தலைவர் என்னை விட மிகுந்த அனுபவசாலி. அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். 

அதற்கு முன்பு நான் ஒரு விஷயத்தை அவருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும், மக்களுக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன். 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா இறந்தபிறகு, அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி வந்தபோது, பல சீனியர்கள் இருந்தனர். செங்கோட்டையன் தான் அடுத்த முதலமைச்சராக வரப்போவதாக சொன்னார்கள். செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற சீனியர்களை மீறி எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்வர் ஆனார்? என்ற கதையை, டிராமாவை மக்கள் நேரலையில் பார்த்தார்கள். கூவத்தூரில் அடித்த கூத்துகள் மற்றும் எல்லோரையும் தாண்டி எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது எல்லாம் மக்கள் அனைவருக்கும் தெரியும். எனவே, மற்றவர்களை விமர்சனம் செய்வதற்கு முன்பு, அவரது நிலையையும் யோசித்துப் பேச வேண்டும். 

முதல்வர் ஸ்டாலின் எனக்கு கொடுத்தது பதவி கிடையாது, கூடுதல் பொறுப்பு தான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க ஆட்சியை அடுத்த நான்கரை ஆண்டுகள் நடத்தப்போவது யார் என எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பங்கு போட்டுக் கொண்டனர். ஆட்சியை இழந்ததுமே, அ.தி.மு.க பலவாறாக பிரிந்துவிட்டது. இதுபோன்ற ஒரு நிலை தி.மு.க.,வுக்கு எக்காலத்திலும் வராது. எப்போது எங்கள் முதலமைச்சர் தான் முதன்மையானவர். 

சமீபத்தில் சென்னையில் கனமழை பெய்யும் என்று தெரிவித்தப்போது, முதலமைச்சர் தொடங்கி, அனைத்து அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், சென்னை மேயர், துணை மேயர் என அனைவரும் களத்தில் இருந்தோம். மக்கள் பாதிக்கப்படாதவாறு பணிகளைச் செய்தோம். நாங்கள் வசிக்கக்கூடிய பசுமை வழிச்சாலையில் தான் எடப்பாடி பழனிசாமி இல்லமும் இருக்கிறது. அவர் அங்கிருந்து வெளியே கிளம்புவதாக தகவல் வந்தபோது, அவர் கனமழை பாதிப்புகளை பார்வையிடத்தான் கிளம்புகிறார் என நினைத்தோம். ஆனால் அவர் ஃப்ளைட் ஏறி சேலத்துக்கு சென்றுவிட்டார். இந்த மாதிரி நேரத்தில் மக்களுக்கு சேவை செய்பவர்கள் தான் மக்கள் மனதில் இருப்பார்கள்." இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Udhayanidhi Stalin Edappadi Palanisamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment