தீபாவளி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அவசரகால மேலாண்மை மையத்தில் ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விபத்துக்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் வகையிலான போன் கால்களை அட்டன் செய்ய கூடுதலாக பணியாட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி. இந்த பண்டிகை நாளில், அனைவரும் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். மற்ற பண்டிகைகளை போல் இல்லாமல், இந்த கொண்டாட்டத்தில், விபத்து குறிப்பாக தீ விபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவசரகால மேலாண்மை மையத்தில் ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அரசின் அவசர மையத்திற்கு சாதாரணமாக 12 ஆயிரம் கால்கள் வரும். தீபாவளி பண்டிகை நாளிலும், அதற்கு முந்தைய நாளிலும் சாதாரணமாக 20 ஆயிரம் கால்கள் வருவது வழக்கம். இது சாதாரண நாட்களை விட 60 சதவீதம் அதிகமாகும்.
இதன் காரணமாக அவசரகால மேலாண்மை மையத்தில் 3 ஷிப்ட் முறையில், கூடுதலாக 50 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவசரமாக உதவி கேட்டு கால் செய்பவர்களிடம் பேசுவதற்காகவும், கால்களை அட்டன் செய்வதற்காகவும் 194 நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தைவிட கூடுதலாக, சாலை விபத்தும் தீவிபத்தும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கீழப்பாக்கம் மருத்துவமனையில் ஏற்கனவே தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு சிகிச்சை பிரிவு உள்ளது. ஏற்கனவே 70 படுக்கைகள் அங்கு இருப்பதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil