வாரந்தோறும் புதன் கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்த வேண்டும் என்று காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த சைலேந்திரபாபு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றதில் இருந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள் மற்றும் சட்டவிரோதமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்கும் சமூக விரோத செயல்களை தடுக்கவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையாளர்களை கைது செய்ய ஆப்ரேஷன் மின்னல் மற்றும் ஆப்ரேஷன் மின்னல் 2.0 என்ற பல ஆப்ரேஷன்களை நடத்தி ரவுகளை பலரையும் கைது செய்துள்ளார். ரவுடிகளுக்கு மட்டுமல்லாமல் காவல்துறைக்கும் பல திட்டங்களை வகுத்து வரும் டி.ஜி.பி சைலேந்திரபாபு, காவலர்களுக்கு கட்டாய விடுமுறை, காவலன் செயலி, காவல் உதவி மையம் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மேலும் காவல்நிலையங்களில் புகார் அளிக்க வரும் பொதுமக்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள அவர், தமிழக காவல் நிலையங்களில் புகார்களை பெறுவதற்காக தனியாக அதிகாரிகளை நியமித்துள்ளார். ஆனாலும், காவல்நிலையங்களில் அளிக்கப்படும் புகார்கள் தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
பொதுமக்களின் இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில், வாரந்தோறும் காவல்நிலையங்களில் பொதுக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். வாரந்தோறும் புதன் கிழமை, காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஐ.ஜி.க்கள், ஆகியோர் இணைந்து இந்த பொதுக்கள் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும்.
புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற வேண்டும். பொதுமக்களின் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil