போதைப்பொருள் கடத்திய வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக் கொடுத்தது விருது அல்ல அது வெறும் பரிசுப்பொருள் மட்டுமே என்று, தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
இந்தியாவில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருவதாகவும், டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக வெளியான தகவலை தொடர்ந்து, டெல்லி காவல்துறையின் சிறப்பு படை, மற்றும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில், கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதை பொருள் கடத்த இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மேற்கு டெல்லியின் பசாய் தாராப்பூர் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்ட காவல்துறையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், அந்த பகுதியில் இருந்த சந்தேகத்திற்குரிய குடோனில் இருந்து, கடத்தலுக்கு தயாராக இருந்த போதைப்பொருளை கைப்பற்றியிருந்தனர்.
இந்த விசாரணையில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மூவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களை பின்னால் இருந்து இயக்கியவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பது தெரியவந்துள்ளது. தற்போது அவர் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரது இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இதனிடையே ஜாபர் சாதிக்குடன் பிரபலங்கள் பலர் இருக்கும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதில் தற்போது தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் ஜாபர் சாதிக்குடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர், நான் சென்னை மாநகரின் காவல்துறை ஆணையராக பதவி வகித்தபோது ஜாபர் சாதிக் 10 சிசிடிவி கேமராக்களை ஸ்பன்சர் செய்திருந்தார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அவர் குற்றவாளி என்று தெரிந்தவுடன் அந்த சிசிடிவி கேமராக்களை அகற்றிவிட்டு திருப்பி கொடுத்துவிட்டோம். அதேபோல் 2013-ம் ஆண்டில் எம்.கே.பி நகரில் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு 2017-ல் முடித்து வைக்கப்பட்ட நிலையில், ஜாபர் சாதிக் கொடுத்தது விருது அல்ல வெறும் பரிசுப்பொருள் மட்டுமே என்று விளக்கம் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“