திருச்சி மாவட்டம் காணக் கிளியநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி கஞ்சா வியாபாரிகளுடன் ஒன்றாக மது அருந்தி, பிரியாணி சாப்பிட்க்கொண்டு இருந்த தகவல் அம்பலமானதால் அவரை டிஸ்மிஸ் செய்து டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் காணக் கிளியநல்லூர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பெரிசாமி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நாகை மாவட்ட நகர காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியுள்ளார். அப்போது கீச்சாங்குப்பம் பழைய கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்லவிருந்த 400 கிலோ கஞ்சாவை இன்ஸ்பெக்டர் பெரியசாமி பறிமுதல் செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய விசைப்படகு உரிமையாளர் மோகன், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சிலம்பு செல்வன், ஜெகதீசன், நிவாஸ், சரவணன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சிலம்பு செல்வன், ஜெகதீசன், நிவாஸ் ஆகியோருடன் இன்ஸ்பெக்டர் பெரியசாமி நாகையில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் போலீஸ் உடையில் பிரியாணி சாப்பிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்போதைய தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி இன்ஸ்பெக்டர் பெரியசாமியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் இந்த சம்பவம் குறித்து ரகசிய விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி கஞ்சா விற்பனையில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பில் இருந்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பெரியசாமியை பணிநீக்கம் செய்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். முக்கியமாக கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததும் ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டதால் அவரை காவல் ஆய்வாளர் பணியில் இருந்து நீக்கம் செய்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் பணியாற்றிபோது, இவர் கஞ்சா வியாபாரி, ரவுடிகளுடன் தொடர்பு உள்ளிட்ட விதி மீறல் செயல்களால் திருச்சி மாவட்டம் காணக்கிளியநல்லூர் காவல்நிலையத்திற்க்கு ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்