கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மில்லில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களை டி.ஜி.பி சைலேந்திரபாபு நேரில் சந்தித்தார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் மேற்கொள்வது போல சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணைகள் மேற்கொண்டு வரும் நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களுடன் காவல் துறையினர் இருக்கிறோம் என்றும் தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக எந்த தாக்குதல்களும் நடக்கவில்லை என்றும் காவல்துறை சார்பில் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: காவல்துறை அதிரடி.. கஞ்சா சாக்லேட் வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது
இதன் ஒரு பகுதியாக கோவையில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ஆனந்தகுமார் மில்ஸில் டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வருவதற்கு முன் புலம்பெயர் தொழிலாளர்கள் சைலேந்திரபாபுவுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ,சேலம் மற்றும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தொழிலாளர்களுடன் ஹிந்தியில் பேசி தொழிலாளர்களின் பாதுகாப்புகளை தெரிவித்தார். மேலும் கோவை மாநகர காவல் துறை என்றும் புலம்பெயர் தொழிலாளர்களுடன் உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்தார்.
மேலும் டி.ஜி.பி தலைமையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தை தொழிலாளர்கள் வீடியோ எடுத்து, தங்கள் குடும்பங்களுக்கு தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக அனுப்ப காவல்துறை சார்பில் அறிவுறுத்தினர்.
அதேபோல டி.ஜி.பி சைலேந்திரபாபு முன்னிலையில் சேலம் சரக காவல்துறை துணை தலைவர் ராஜேஸ்வரி தொழிலாளர்களுடன் ஹிந்தியில் பேசினார். பின்னர், புலம்பெயர் தொழிலாளர்கள் டி.ஜி.பி உடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிலர் செல்பி எடுத்துக் கொண்டனர்.
அதற்குப் பின்னர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக கோவை சரகத்திற்கு உட்பட்ட தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்களுடன் காவல் துறை அதிகாரிகள் கலந்துரையாடல் நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் டி.ஜி.பி சைலேந்திர பாபு, டி.ஐ.ஜி விஜயகுமார், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ஜி.பி சைலேந்திரபாபு, “கோவை சரகத்திற்கு உட்பட்ட தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பத்தை நல்ல முறையில் கையாண்ட கோவை, திருப்பூர், ஈரோடு தொழில் முனைவோர்களுக்கு நன்றி. இவ்விவகாரத்தில் பத்திரிகையாளர்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர்.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் ஏற்பட்ட பதட்டம் தனிந்துள்ளது. தற்போது சூழல் நன்றாக உள்ளது. இருந்தாலும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. அதனால் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது. இவ்விவகாரத்தில் வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய ஒரு சிலர் தலைமறைவாக உள்ளனர். சிலர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். தற்போது வதந்தி குறைந்துள்ளது. பாட்னா, டெல்லி, போபால், பெங்களூரு ஆகிய இடங்களில் வதந்தி பரப்பியவர்களை கைது செய்ய தனிப்படை காவல் துறையினர் முகாமிட்டுள்ளனர்.
வடமாநில தொழிலாளர்களுடன் உரையாட வேண்டும் என தொழிலதிபர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வடமாநில தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும், ரோந்து வாகனங்கள் சென்று கண்காணிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பெற்றோர்களிடம் பயம் உள்ளது. அதனை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏன் பொய்யான செய்திகளை பரப்பினார்கள் என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் புலன் விசாரணை நடத்தப்படும். தமிழ்நாட்டிற்கு சம்பந்தம் இல்லாத செய்திகளை பரப்பியுள்ளனர்.
இதனை டிராமா போல தயார் செய்கிறார்கள். தாம்பரத்தில் ஒரு வடமாநில தொழிலாளி அடிபட்டு கிடப்பது போல பதட்டமான வீடியோ வெளியானது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. வதந்தி பரப்பிய ஒரு சிலருக்கு அரசியல் கட்சி தொடர்பு இருக்கிறது. அது புலன் விசாரணையில் தெரியவரும். ஹோலி பண்டிகைக்கு நிறைய பேர் முன்பதிவு செய்து வடமாநிலங்களுக்கு சென்றனர். ஒரு சிலர் பயத்தில் சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் 10 இலட்சம் பேர் இருக்கலாம். ரயில் நிலையங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வதந்தி பரவினால் பிற மாநில அதிகாரிகள் தொடர்பு கொள்ள நோடல் ஆபிசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் பல போலீசார் கொலை செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகளை பிடிப்பதை கள நிலவரத்திற்கு ஏற்ப தான் முடிவு செய்ய வேண்டும். குற்றவாளிகளை பிடிக்கும் போது சில நேரங்களில் துப்பாக்கி பிரயோகம் செய்ய வேண்டியிருக்கும். காவல் துறையினரை துப்பாக்கி பயன்படுத்தாதீர்கள் என சொல்ல முடியாது. குற்றம் புரிய சோஷியல் மீடியாவை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
வங்கி கணக்கிற்கு பணத்தை தவறுதலாக அனுப்பியதாக கூறி, லிங்க் அனுப்பி திருப்பி அனுப்புமாறு கேட்கிறார்கள். அந்த லிங்க்கில் பணத்தை அனுப்பாதீர்கள். வங்கி மொத்த கணக்கை ஹேக் செய்து பணத்தை எடுத்து விடுவார்கள். இதுபோல தொடர்பு கொண்டால் அந்த எண்ணை பிளாக் பண்ணுங்கள். காவல் துறையினரிடம் புகார் தெரிவியுங்கள். ஓ.டி.பி.,யை ஷேர் செய்யாதீர்கள். மின் கட்டணம், ஆதார் கார்டு என சீசனுக்கு ஏற்ப மோசடி செய்கிறார்கள். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.