அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை என திருச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில காவல் துறை மண்டலங்களுக்கு இடையேயான 62-வது தடகளம், சைக்கிளிங் மற்றும் கோ-கோ விளையாட்டு போட்டிகள் திருச்சியில் இன்று தொடங்கியது. இதனை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில்,
தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஜாதி சண்டை கிடையாது. மத கலவரங்கள் இல்லை. கள்ளச்சாராயம், துப்பாக்கி சூடு கலவரங்கள் இல்லை. மொத்தத்தில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது.

அதேபோல் இங்கிருந்து தப்பி சென்று தலைமறைவாக இருந்த பல ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நிதி நிறுவனங்கள் மூலம் பல லட்சம் மக்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்களை இன்டர்போல் மூலம் தொடர்பு கொண்டு அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மாநகர விரிவாக்கம் என்பது திருச்சி மட்டுமல்ல, சென்னையில் இது போன்ற விரிவாக்கம் உள்ளது, புதிய தொழிற்சாலைகள், புதிய குடியிருப்புகள் இன்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே தேவையின் அடிப்படையில் புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.
தமிழக முதல்வர், காவலர்களுக்கு 7 நாள் முழுவதும் வேலை என்பது இருந்ததை சட்ட திருத்தம் செய்து, மற்ற அரசு ஊழியர்களைப் போல வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் தான் வேலை, ஆறாவது நாள் வேலை செய்தால் அதற்கு ஈ.சி.ஆர் வழங்கப்படுகிறது. ஒரு சில காலகட்டங்களில் குறிப்பாக ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு, திருவண்ணாமலை தீபம் உள்ளிட்ட முக்கியமான காலங்களில் விடுமுறை என்பது வழங்க முடியாது என்ற நிலை உள்ளது. இருப்பினும் வாரத்தில் ஒரு நாள் காவலர்களுக்கான விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. அவ்வழக்கு மீண்டும் சிபிஐக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதேபோல, வேங்கைவயல் சம்பவம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையும் சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறது. அவ்வழக்கும் சிபிஐக்கு மாறுவதற்கான வாய்ப்பு இல்லை என கூறியுள்ளார்.
காவல்துறையின் இத்தனை பெருமைக்கும் முக்கியமானவர்கள் தமிழகத்தில் பணியாற்றும் 1.34 லட்சம் காவலர்கள் தான். பல்வேறு கட்டங்களில் உதவி ஆய்வாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 444 உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக மார்ச் 1-ந்தேதி பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. இன்னும் கூடிய விரைவில் அடுத்த பேட்ச் உதவி இன்ஸ்பெக்டர்கள் சுமார் 500 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இந்திய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் காவலர்களின் பங்கு அளப்பரியது. அதில் ஒரு பெரிய சரித்திரம் இருக்கிறது. 1956, 1960-ம் ஆண்டுகளில் ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் ஆக்கி போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. அதில் இரண்டு வீரர்கள் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த காவலர்கள் என்பது சிறப்புமிக்கது.

1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் திருச்சியை சேர்ந்த சுப்பிரமணியம் என்ற காவலர் இந்திய அணியின் சார்பாக 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கு கொண்டார். சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நாகநாதன் என்னும் காவலர் இந்திய அணி சார்பில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ரிலே ரேசில் கலந்து கொண்டார் என்பது பெருமைக்குரியதாக தமிழ்நாடு காவல்துறை கருதுகிறது.
2020-ம் ஆண்டு நடந்த மாநிலங்களுக்கு இடையேயான காவல்துறை போட்டியில் தமிழக காவல்துறை 5 தங்கப்பதக்கம், 4 வெள்ளிப்பதக்கம், 5 வெண்கலப் பதக்கம் என 14 பதக்கங்களை பெற்று இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தை பெற்றது. விளையாட்டு நம் அனைவருக்கும் அவசியமாக இருக்கிறது.
காவலர்களுக்கு உடல் நலம், மிக மிக முக்கியம். விளையாட்டு வீரர்கள் மற்ற காவலர்களுக்கு இன்றைக்கு ஒரு ரோல் மாடல்களாக உடல் நலத்துக்கும், மன நலத்துக்கும், சுறுசுறுப்புக்கும், நேர்மைக்கும் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறீர்கள் என்பதை மனதில் கொண்டு நீங்கள் சிறப்பாக விளையாடவேண்டும் எனப் பேசினார்.
நிகழ்ச்சியில் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர், திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil