Coimbatore, Madurai, Trichy News: கோடை மழையால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள மின்துறை தயார் - அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN Transport minister SS Sivasankar on Bike Taxi Tamil News

அதிகரிக்கும் பில்லூர் அணையின் நீர்மட்டம்: தமிழகத்தின் கோவையில் கனமழை பெய்து வரும் நிலையில், மேட்டுப்பாளையம் அருகே, 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்துள்ளது. இதனால், அணையில் இருந்து தற்போது 16,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை தொடர்வதால் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

பில்லூர் அணையில் இருந்து தற்போது 16,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இரும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • May 26, 2025 20:14 IST

    கோடை மழையால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள மின்துறை தயார் - அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் 

    அரியலூரில் மின் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழ்நாட்டில் கோடை மழையால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளது. தேவையான மின்கம்பங்கள் போதிய அளவு கையிருப்பு உள்ளன. மின்வாரிய ஊழியர்கள் எந்நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.



  • May 26, 2025 19:17 IST

    நீலகிரிக்கு ரெட் அலர்ட் - சுற்றுலா தலங்கள் மூடல்

    கனமழை பெய்து வருவதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொட்டபெட்டா காட்சி முனை, பைன் வனப்பகுதி, பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

     

     



  • Advertisment
    Advertisements
  • May 26, 2025 18:51 IST

    மணப்பாறை அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

    திருச்சி: மணப்பாறை அருகே மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி சிறுவன் வேல்முருகன்(15) உயிரிழந்தார். அயன்பொருவாயில் மின் மோட்டாரை இயக்கிய போது சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது



  • May 26, 2025 18:45 IST

    நீலகிரி: மரம் முறிந்து விழுந்து காவல் நிலையம் சேதம்

    கனமழையால் நீலகிரியின் குன்னூர் அருகே கேத்தி காவல் நிலையத்தின் மீது மரம் முறிந்து விழுந்தது. இதில், காவல் நிலைய கட்டிடத்தின் முன்பகுதி சேதமடைந்தது. மாவட்டத்தின் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. போர்க்கால அடிப்படையில் அவை அகற்றப்பட்டு வருகின்றன. 



  • May 26, 2025 18:43 IST

    முழு கொள்ளளவை எட்டிய கோவை பில்லூர் அணை

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தன்மை காரணமாக முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது.இன்னும் 3 அடிகளே எஞ்சியுள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகளில் இருந்து வினாடிக்கு 18000 கனஅடி நீர் பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர மக்கள் கவனமாக இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

     

     



  • May 26, 2025 18:42 IST

    நெல்லை: மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

    தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் கனமழை பெய்கிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் மக்கள் குளிக்க, நீர்நிலைக்கு அருகே செல்ல, மணிமுத்தாறு அருவியை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

     

     



  • May 26, 2025 18:38 IST

    சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

    மேற்குத் தொடர்ச்சிமலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.



  • May 26, 2025 18:08 IST

    நீலகிரியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள்

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகப் பெய்து வரும் கன மழையால், இதுவரை 43 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதாகவும், 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மரம் முறிந்து விழுந்ததில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 26, 2025 17:57 IST

    மக்கள் குறைதீர் கூட்டம்: கோவை மாநகராட்சி அறிவிப்பு

    கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மழையின் காரணங்களால் நடைபெறாது என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



  • May 26, 2025 17:43 IST

    உதகை மலர்க்கண்காட்சி: 1.84 லட்சம் பேர் கண்டுரசிப்பு

    உதகை மலர்க்கண்காட்சியை இதுவரை 1.84 லட்சம் பேர் கண்டு களித்துள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.11 நாட்கள் நடைபெற்ற மலர்க்கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 1.84 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். கண்காட்சியில், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் 40 ஆயிரம் வண்ண மலர் மாடங்கள் இடம் பெற்றுள்ளன.



  • May 26, 2025 17:28 IST

    வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை: வனத்துறை

    கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கி உள்ளனர் என்ற தகவல் தவறானது.

    வெள்ளியங்கிரி மேலே ஏறிய பக்தர்கள் மெதுவாக இறங்கி கொண்டுள்ளனர். வெள்ளியங்கிரி மலையில் வனத்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

    வனத்துறை



  • May 26, 2025 16:47 IST

    கோவை, நீலகிரிக்கு அதி கனமழை எச்சரிக்கை

    கோவை, நீலகிரியில் வரும் மே 30ம் தேதி வரை கன முதல் மிக கனமழை பெய்யும்

    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை



  • May 26, 2025 15:56 IST

    சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தல்: முக்கியமான இடங்களில் QR code

    கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணியின் வாகனத்தை தாக்கிய வியாபாரியின் வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கொடைக்கானல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை

    சுற்றுலா பயணிகள் வசதிக்காக முக்கியமான இடங்களில் QR code வைத்துள்ளதாகவும், அதனை ஸ்கேன் செய்தால் அதில் புகார் பெறக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • May 26, 2025 15:11 IST

    ஈரோடு இரட்டை கொலை வழக்கில் விசாரணை அதிகாரி மாற்றம்

    ஈரோடு மாவட்டம், சிவகிரி இரட்டை கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த பெருந்துறை டி.எஸ்.பி கோகுல கிருஷ்ணன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஏ.டி.எஸ்.பி விவேகானந்தனை புதிய விசாரணை அதிகாரியாக நியமித்து ஈரோடு எஸ்.பி சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.



  • May 26, 2025 14:39 IST

    4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

    நெல்லை, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (மே 26) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.



  • May 26, 2025 12:09 IST

    டாஸ்மாக்கில் ஏதோ நடக்கிறது - நீதிபதி புகழேந்தி

    ஆவணங்களை பார்க்கும் போது மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது; டாஸ்மார்க் நிறுவனத்தில் முறைகேடு குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து. மதுரையைச் சேர்ந்த மாயக்கண்ணன், முருகன், ராமசாமி தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி உத்தரவு; டாஸ்மாக்கில் ஊழல்களை அனுமதிக்கக்கூடாது என்று நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். 



  • May 26, 2025 11:39 IST

    மருத்துவர் இல்லாததால் ஒருவர் மரணம் என புகார்

    திருவாரூர்: குடவாசல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் ஒருவர் மரணம் என புகார். சுரேஷ் என்பவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இல்லை என புகார் நள்ளிரவில் இரண்டு செவிலியர்கள், மருத்துவப் பணியாளர் மட்டுமே பணியில் இருந்ததாக குற்றச்சாட்டு



  • May 26, 2025 11:32 IST

    புதுக்கோட்டையில் லாரி மீது பைக் மோதி விபத்து - 2 பேர் பலி

    புதுக்கோட்டை மாவட்டம், பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சிவராமன் என்ற இளைஞரும், அவரது உறவினருமான அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படித்து வந்த அறிவுக்கரசு என்ற சிறுவனும் மார்க்கெட்டில் பைக்கில் சென்று காய்கறிகள் வாங்கி வந்தனர். பின்பு இருவரும், அரசு மருத்துவமனை எதிரில் சாலையைக் கடக்க முயன்ற போது, சாலையில் மறுபுறத்தில் வந்த லாரியின் பக்கவாட்டில் இவர்களின் பைக் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில், லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி டிரைவர் சதீஷ் கண்ணன் என்பவரை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



  • May 26, 2025 11:08 IST

    வால்பாறையில் கனமழை -  போக்குவரத்து பாதிக்கப்பு; நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

    கோவை மாவட்டம் வால்பாறையில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானொலி ஆய்வு மையம் அறிவித்து இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது மேலும் நேற்று முதல் பலத்த காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து நிலையில் இன்று அதிகாலை  வால்பாறை அருகே உள்ள கருமலை குரூப் ஆபீஸ் எதிரே உள்ள சாலையிலும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது எனவே துறைசார்ந்த அதிகாரிகள் அதற்கான துரித நடவடிக்கை மேற்க் கொண்டு வருகின்றனர் மேலும்    அக்கா மலை எஸ்டேட் பகுதியில் மீண்டும் இன்று அதிகாலை முதல்  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது



  • May 26, 2025 11:07 IST

    நீலகிரியில் கனமழை - சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடல் 

    நீலகிரி மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் 2599மி மீட்டர் மழை பதிவாகியுள்ளது அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 353 மி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் உட்பட அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும், வெளியே வருவதைதவிர்க்கவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

    மேலும், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ள சுற்றுலா தளங்களுக்குள் யாரும் சொல்லக்கூடாது மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    நீலகிரியில் கனமழையால் தொடர்ந்து காற்றுடன் மழை பெய்து வந்தநிலையில், நேற்று ஒரு சில சுற்றுலாதலங்கள் மூடப்பட்ட நிலையில் தற்போது துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஊசிமலை உள்ளிட்ட அனைத்துசுற்றுலா தலங்களும் மூடப்பட்டது.



  • May 26, 2025 11:03 IST

    விடாமல் கொட்டி தீர்க்கும் கன மழை - கோவைக்கு இன்றும் ரெட் அலர்ட் 

    கோவை  மாவட்டத்திற்கு இன்றும் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் வார்னிங் கொடுக்கப்பட்டு உள்ளது. பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் இந்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதும் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கேரளா மற்றும் கேரளாவின் தமிழக எல்லைப் பகுதிகளான கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் சின்ன கல்லாறு பகுதியில் அதிகபட்சமாக 213 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

    சிறுவாணி அடிவாரப் பகுதிகளில் 128 மில்லி மீட்டர் மழையும், வால்பாறை பி.ஏ.பி பகுதியில் 114 மில்லி மீட்டர், வால்பாறை தாலுகாவில் 109 மில்லி மீட்டர் மழையும் வால்பாறை சின்கோனா 124 மில்லி மீட்டர், சோலையார் அணைப்பகுதியில் 99 மில்லி மீட்டர்  அதிக அளவில் மழை பதிவாகி உள்ளது.  மேலும் ஆனைமலையில் 28 மில்லி மீட்டர் மழையும், மதுக்கரை தாலுகாவில் 43.20 மில்லி மீட்டரும், ஆழியார் பகுதியில் 60.20 மில்லி மீட்டர் மழையும், பொள்ளாச்சி மக்கினம்பெட்டியில் 80 மில்லி மீட்டர் மழையும், பொள்ளாச்சி தாலுகாவில் 41 மில்லி மீட்டர் மழையும், மேட்டுப்பாளையம் பில்லூர் அணைப் பகுதியில் 22 மில்லி மீட்டர் மழையும், மேட்டுப்பாளையத்தில் 18 மில்லி மீட்டர் மழையும், சூலூர் பகுதியில் 18.40 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.  மேலும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்பொழுது வரை சாரல் மழை பெய்து கொண்டு உள்ளது.  ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது.



  • May 26, 2025 10:53 IST

    கோவை, பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் - மழை காரணமாக மலை ஏற பக்தர்களுக்கு தடை

    மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்து உள்ள பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவிலுக்கு, கன மழை பெய்து வருவதால், பக்தர்கள் மலை ஏறுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கோவில் வனத்துறையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர். சிறுவாணி மலைத் தொடரின் ஒரு பகுதியாக இருக்கும் வெள்ளியங்கிரி மலை, சிவனடியார்கள் மற்றும் முருக பக்தர்கள் மத்தியில் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் மலையேறி, வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிப்பது வழக்கம். 

    குறிப்பாக, மகா சிவராத்திரி மற்றும் சித்திரைத் திருவிழா காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
    தற்போது, அப்பகுதியில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருவதால், மலைப் பாதைகளில் வழுக்கும் தன்மை அதிகரித்து உள்ளது. மேலும், எதிர்பாராத நிலச் சரிவுகள் மற்றும் காட்டு நீரோடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வனத் துறையினர் தெரிவித்து உள்ளதனர். மழைக் காலம் முடியும் வரை அல்லது பாதுகாப்பான சூழல் திரும்பும் வரை இந்த கட்டுப்பாடு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     பக்தர்கள் அனைவரும் அரசின் அறிவுறுத்தல்களையும், வனத் துறையினரின் வழிமுறைகளையும் பின்பற்றி ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கோவில் நிர்வாகத்தினரும் கேட்டுக் கொண்டு உள்ளனர்.



  • May 26, 2025 10:52 IST

    வைகாசி அமாவாசை - ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் 

    இன்று வைகாசி மாத அமாவாசை மற்றும் கோடை விடுமுறையை தொடர்ந்து, ராமேஸ்வரத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.  தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    பின்னர் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோவில் உள்ள 22 தீர்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி அருள்மிகு  இராமநாதசுவாமி சுவாமி மற்றும் ஶ்ரீ பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் வருகை தொடர்ந்து நகர் பகுதி, பாம்பன் பாலம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



  • May 26, 2025 10:50 IST

    16 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 26, 2025 10:34 IST

    கோவை குனியமுத்தூர் பகுதியில் மழைக்கு சாய்ந்த வேப்பமரம் 

    கோவை குனியமுத்தூர் மின் நகர் பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவரது வீட்டு அருகே இருந்த வேப்பமரம் மழையால் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கார்த்திக் என்ற வாலிபர் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தந்த தகவலின் அடிப்படையில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி துரித நடவடிக்கையில்  ஈடுபட்டனர். மழைக்கு ஒதுங்கிய நாய் குட்டிகள் உயிர் தப்பியது.



  • May 26, 2025 09:50 IST

    48 ஆண்டுக்குப் பின் மதுரையில் தி.மு.க பொதுக்குழு கூட்டம்

    48 ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரையில் தி.மு.க-வின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் வரும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, மதுரை உத்தங்குடியில் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 



  • May 26, 2025 09:46 IST

    சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு

    கோவை  மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில்,  சிறுவாணி அணையின் நீர்மட்டம் 26.60 அடி உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. 

    அடிவாரத்தில் 128 மி.மீ., அணைகட்டு பகுதியில் 120 மி.மீ. மழை பொழிவு பதிவாகியுள்ளது. அணையின் வரையறுக்கப்பட்ட கொள்ளளவு 44.61 அடியாக இருக்கின்ற நிலையிலே, அணையின் தற்போதைய நீர்மட்டம் 26.60 அடியாக உயர்ந்துள்ளது.

    சிறுவாணி அணையில் இருந்து கோயமுத்தூர் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக வரையறுக்கப்பட்ட 101.40 எம்.எல்.டி. அளவைவிட, 65.08 என்ற அளவில் தண்ணீர் திறக்கப்படுகின்றன. அணையின் நீர்மட்டம் கன மழையின் காரணமாக விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கபடுகிறது



  • May 26, 2025 09:25 IST

    கனமழை பெய்தாலும் சேவையில் பாதிப்பு இல்லை: கோவை விமான நிலைய அதிகாரிகள் தகவல்

    கனமழை பெய்தாலும் கோவை சர்வதேச விமான நிலைய சேவையில் எந்த பாதிப்பும் இல்லை. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை வழக்கம்போல் செயல்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



  • May 26, 2025 08:20 IST

    சின்னகல்லாறு பகுதியில், கடந்த 24 மணி நேரத்தில், 21.3 செ.மீ மழை பதிவு

    தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டம் சின்னகல்லாறு பகுதியில், கடந்த 24 மணி நேரத்தில், 21.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது, சிறுவாணி அனை அடிவாரம், 12.8 செ.மீ மழையும், சின்கோனா பகுதியில்,12.4 செ.மீ. மழையும், வால்பாறை பகுதியில்,11.4 செ.மீ மழையும், பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.



  • May 26, 2025 08:18 IST

    அவலாஞ்சியில், கடந்த 24 மணி நேரத்தில் 35 செ.மீ மழை பதிவு

    தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி அவலாஞ்சியில், கடந்த 24 மணி நேரத்தில் 35 செ.மீ மழை பதிவாகியுள்ளது. குடகு, வடநாடு, ஹாசன், உடுப்பி, தக்ஷின போன்ற கன்னட பகுதிகளிலும் கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.



  • May 26, 2025 08:15 IST

    ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாயில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவை ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாயில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால்,மீன் பிடிக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.



  • May 26, 2025 08:15 IST

    சாலை தடுப்பில் மோதி கார் விபத்து: 4 பேர் படுகாயம்

    கோவை: காந்திபுரம் பகுதியில் கார் ஒன்று சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த 4 பேரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: