கொரோனா பழியை கோயம்பேடு வியாபாரிகள் மீது போடுவதா? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

மு. க. ஸ்டாலின்: ஆயிரம் ரூபாயோடு அனைத்தும் முடிந்துவிட்டது என்று நினைக்காமல், திசைதிருப்பும் அறிவிப்புகளைத் தவிர்த்துவிட்டு, ஐயாயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கிட வேண்டும்

Stalin Demand Rs.5000 Corona Relief: “கொரோனா பரவல் தொடர்பாக கோயம்பேடு வணிகர்கள் – தொழிலாளர்கள் – பொதுமக்கள் மீது பழிபோடுவதை முதலமைச்சர் நிறுத்தவேண்டும் என்றும், ஐயாயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கிட தமிழக முதலவர் முன்வர வேண்டும் என்று மு.க ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

மு. க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கொரோனா நோய்த்தொற்று குறித்து , சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போதே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. எவ்வளவோ எச்சரிக்கை செய்து, நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியது. முகக்கவசம் வழங்க வேண்டும் எனச் சொன்னபோது , அதனை மறுத்து, “கொரோனா தமிழ்நாட்டுக்கு வராது” என்று முதலில் “ஆரூடம்” சொன்ன ஆட்சியாளர்கள், அதன்பிறகு “வந்தாலும் ஆபத்தில்லை” என்றார்கள். நோய்த்தொற்று அதிகரித்து, உயிரிழப்புகளும் வளர்ந்து தொடரும் நிலையில், “நோய்த்தொற்றுடன் வாழப் பழகிக் கொள்ளவேண்டும்” என்கிறார்கள்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோதே உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய அரசு, அதன்பிறகு “முழு ஊரடங்கு” என புதிய கண்டுபிடிப்பை திடீரென குறைந்த அவகாசத்தில் அறிவித்து, அதன் காரணமாக பல இடங்களிலும் மக்கள் பதற்றத்துடன் கூடி அவசர அவசரமாக அத்தியாவசியப் பொருட்களை வாங்க நேர்ந்தபோதும், பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.கழகம், பொருட்கள் விற்பனை நேரத்தை அதிகரித்து மக்கள் நெரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது. அதனையும் அலட்சியப்படுத்தியது அ.தி.மு.க அரசு.

குளறுபடிகளாலும், நிர்வாகச் சீர்கேட்டாலும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட கொரோனா போரின் முன்கள வீரர்களாகச் செயல்படுவோருக்கே பரவலாக நோய்த்தொற்று ஏற்படும் மோசமான நிலையை உருவாக்கியுள்ளது எடப்பாடி அரசு. தற்போது தமிழகத்தில் சமூகத் தொற்றை எதிர்கொண்டிருக்கிறோமோ என்ற ஆபத்தான சூழலில், அதற்குப் பொதுமக்கள் மீதும் வணிகர்கள் – தொழிலாளர்கள் மீதும் பழிபோட்டுத் தப்பிக்க நினைக்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் ஏறத்தாழ 50 நாட்களுக்கும் மேலாக, வருமானத்தை இழந்து, வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள், அரசின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டே பெருமளவில் நடந்து கொள்கிறார்கள். அரசுதான், திடீர் முடிவுகளால் மக்களைத் திக்கு முக்காட வைத்து, நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. அதுவே நோய்த்தொற்றுக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்பதை மறைப்பதற்காக, ஊரடங்கு விதிகளை மக்கள் கடைப்பிடிக்கவில்லை எனப் பழி போட முயற்சி செய்கிறார்கள். மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனை குறித்து மக்களிடம் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோயம்பேடு காய்கறிச் சந்தையில் மக்கள் நெரிசல் ஏற்பட்டு, நோய்த்தொற்று பரவியதற்கு, சந்தையை இடம் மாற்றம் செய்ய வியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை எனப் பழியைத் தூக்கி வணிகர்கள் மீது போட்டுள்ளார்.

அவசரகதியிலான முழு ஊரடங்கு அறிவிப்பும், அவகாசம் இல்லாத காரணத்தால் கோயம்பேடு சந்தை உள்ளிட்ட இடங்களில் வணிகர்களும், மக்களும் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு – அமலாக்க நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளத் தவறிய அ.தி.மு.க. அரசின் நிர்வாக அலட்சியமுமே நோய்த்தொற்று பரவுதலுக்கு அடிப்படைக் காரணமாகும் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் “மூன்று நாட்களில் தமிழகத்தில் கொரோனா ஒழிந்துவிடும்” என்று அறிவியல் அடிப்படை ஏதுமின்றி பொய் வாக்குறுதி அளித்த முதலமைச்சர், இப்போது “நோய்த் தொற்று அதிகமாகி, பிறகுதான் இறங்கும்” என்று குழப்பமான அறிவிப்பை வெளியிடுகிறார். கொரோனா குறித்து, தான் வெளியிடும் அறிவிப்புகள், எத்தகைய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, அச்சத்தையும் பரபரப்பையும் உருவாக்கும் என்பதைச் சற்றும் எண்ணிப் பார்க்காமலேயே செய்கிறார். தனது முரண்பாடுகளையும் தவறுகளையும் மறைப்பதற்கு வணிகர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பழிபோடுவதை முதலமைச்சர் நிறுத்திக்கொள்ள வேண்டும்”  என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

மாவட்ட வாரியாக நடத்தப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை, நோய்த்தொற்றுக்கான காரணம் ஆகியவற்றை உரிய முறையில் அரசு வெளியிடவேண்டும் என்று பலதரப்பினரும் திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லியும், அரசு தரப்பில் ஒளிவு மறைவற்ற வெளிப்படைத் தன்மை இல்லை. சென்னையிலிருந்துதான் மற்ற மாவட்டங்களுக்கு கொரோனா பரவியது எனவும், குறிப்பிட்ட இடம் – மக்கள் – வணிகர்கள் – தொழிலாளர்கள் எனக் குற்றம்சாட்டி, தமிழக மக்களை பேதப்படுத்தி, தேவையற்ற பீதியை உருவாக்குவதை முதலமைச்சர் கைவிடவேண்டும்.

திமுக எம்.பி.க்கள் vs தலைமைச் செயலாளர்: என்ன நடந்தது கோட்டையில்?

50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கால் உழன்று கொண்டிருக்கும் மக்களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்து, அவர்தம் வாழ்க்கைக்கும், வாழ்வாதாரத்திற்கும் உற்ற வழி காண்பதைப் பற்றி இனியாவது அவர் சிந்திக்க வேண்டும். உணவுப் பொருள் தட்டுப்பாடு இல்லை என்கிறார் முதலமைச்சர்; ஆனால் தினக் கூலி செய்து பிழைப்பு நடத்துவோர், அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஏழை – எளிய விளிம்பு நிலை மக்கள், கையில் வாங்கும் சக்தி இல்லை எனும்போது, தேவையான உணவுப் பொருள்களை எங்ஙனம் வாங்கி நுகரமுடியும் என்பதை அறியாதவரா முதலமைச்சர்? அதனால்தான், அவர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணமாகத் தர வேண்டும் என்று தொடக்கம் முதலே வலியுறுத்திவருகிறேன். ஆயிரம் ரூபாயோடு அனைத்தும் முடிந்துவிட்டது என்று நினைக்காமல், திசைதிருப்பும் அறிவிப்புகளைத் தவிர்த்துவிட்டு, ஐயாயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கிட இப்போதாவது முதல்வர் முன்வர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu dmk chief mk stalin statement demand 5000 corona relief assistance

Next Story
அதிமுக மருத்துவர் அணி டாக்டர் சி.என்.ராஜதுரை மரணம்AIADMK C N Rajadurai Death
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express