திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தி.மு.க. பொருளாளர் மாசி என்பவர் மர்நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் நாகம்பட்டி ஊராட்சியில், ஒன்றிய கவுன்சிலராக இருப்பவர் முத்துமாரி. இவரது கணவர் மாசி. தி.மு.க.வின் தெற்கு ஒன்றிய பொருளாளராக இருக்கும் இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று (செப்டம்பர் 26) மாலை, 7 மணியளவில் பெருமாள் கவுண்டன்பட்டியில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.
இவர் அந்த பகுதியின் சமத்துவபுரம் அருகே வந்தபோது, அவரை வழிமறித்த சில மர்மநபர்கள், தங்கள் வைத்திருந்த அரிவாளால் மாசியை சராமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த மாசி, உயிரை காப்பாற்றிக்கொள்ள, அங்கிருந்து ஓடியபோதும், அந்த மர்மகும்பல், தொடர்ந்து அவரை விரட்டி சென்று, வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மாசியின் ஒரு கை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர், மாசியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலை தொழில்போட்டி காணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாசியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் அவரின் உறவினர்கள் திரண்டு, மறியலில் ஈடுபட்டதால், காவல்துறையினர் மற்றும் அவரின் உறவினர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. திமுக பொருளாளர், மர்மநபர்களால் விரட்டி படுகொலை செய்யப்பட் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“