Tamilnadu DMK Executive Committee Members Meeting : தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுக அமோக வெற்றி பெற்று தங்களது வாக்கு வங்கியை மீண்டும் நிரூபித்துள்ளது. அதிலும் குறிப்பாக சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்பட்ட கொங்கு மண்டலத்தின் கோவை மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் திமுக கைப்பற்றியது.
இந்நிலையில், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் அங்குள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் மேடையில் பேசிய திமுக கோவை மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் பேசியது தற்போது வைரலாக பரவி வருகிறது.
கோவை மாவட்டத்தில் மேயர் கனவுடன் தீவிரமாக பணியாற்றி வந்த மீனா ஜெயக்குமாருக்கு கட்சியில் சீட் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர், சற்று விலகியிருந்த நிலையில், தற்போது நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், கோவை மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்தி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவுடன், தலைவர் கோவைக்கு ஒரு நல்ல தலைவரை அனுப்பி வைத்துள்ளார் என்று என் நண்பர்களிடம் கூறினேன். மாவட்ட பொறுப்பாளர் கார்த்தியுடன் ஒரு சிறிய இடத்தகராறில், தொடங்கியது பிரச்சினை. மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் என் வெற்றியை தடுத்தார். என்னைப்பற்றி சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்பினார்.
எல்லோரும் மனிதர்கள்தான் உங்கள் மனைவிக்காக என் வாய்ப்பை மறுப்பதா என் வளர்ச்சியை தடுக்க நீங்கள் யார்? என்று தனக்கு சீட் கிடைக்காத ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர், மாவட்ட பொறுப்பாளர் கார்த்தியை ஒருமையில் பேச தொடங்கினார். இதை கேட்டு கார்த்திக் அப்செட் ஆன நிலையில், அவரது ஆதரவாளர்கள் மீனா ஜெயக்குமாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்ப தொடங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கோபமடைந்தார்.
அதன்பிறகு பேசிய செந்தில்பாலாஜி, செயற்குழு கூட்டத்தில் இதைப்பற்றி பேசக்கூடாது. உங்களது பிரச்சினைகளை மனுவாக கொடுங்கள் என்று சொல்ல, அவைர் பேச்சையும் மீறி மீனா ஜெயக்குமார் பேச முயற்சித்ததால், சக நிர்வாகிகள் அவரை சமாதாப்படுத்தி அமர வைத்தனர். இதனால் செயற்குழு கூட்டத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “