பா.ம.க.வில் அன்புமணி, ராமதாஸ் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் தாயாரை தண்ணீர் பாட்டில் கொண்டு அன்புமணி தாக்கினார் என்று காலையில் ராமதாஸ் குற்றம் சாட்டிய நிலையில், தாயாரோடு அண்மையில் மாமல்லபுரத்தில் நடந்த மாநாட்டில அன்புமணி பேசும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகழத்தில் முக்கிய அரசியல் கட்சியாக செயல்பட்டு வரும் பா.ம.கவில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மோதல்கள் வெடித்து வருகிறது. இதில் சமீபத்தில் நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், தனது உறவினர் ஒருவரை கட்சியின் இளைஞரணி தலைவராக ராமதாஸ் நியமனம் செய்தார், இந்த நியமனம் அறிவித்த மேடையிலேயே அன்புமணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் அனுபவமே இல்லாத ஒருவன் கட்சியில் இணைந்து சில மாதங்களுக்குள்ளாகவே இப்படி ஒரு பதவி கொடுப்பது சரியல்ல என்று அன்புமணி கூறியிருந்தார். அதேமேடையில், இது நான் உருவாக்கிய கட்சி, இங்கு நான் சொல்வது தான் நடக்கும், என் பேச்சை கேட்டு இருக்கிறது என்றால் இருக்கலாம், நான் எடுக்கும் முடிவு தான் இறுதி என்று ராமதாஸ் கூறியததை தொடர்ந்து உடனடியாக அங்கிருந்து வெளியேறிய அன்புமணி தன்னை சந்திக்க சென்னை அலுவலகம் வரலாம் என்று கட்சி நிர்வாகிகளிடம் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தந்தை மகன் இருவருக்கும் இடையே சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தற்போதுவரை இருவருக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கி நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்று ராமதாஸ் கூறியிருந்தார். நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்று அன்புமணி கேட்டதை தொடர்ந்து விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ராமதாஸ்.
இதனிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற பா.ம.க மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பில் கலந்துகொள்ள 27 பேரை மாற்றம் செய்ய ராமதாஸ் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் அன்புமணி மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் ராமதாஸ், தனது தாயாரை தண்ணீர் பாட்டிலால் தாக்கினார் என்று குற்றம்சாட்டியிருந்தார்.
அனைவரும் பெற்ற தாயை கடவுள் என்போம். அப்படி இருக்கும்போது பொங்கல் சமயத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, உனது 2-வது மகளை கட்சியின் இளைஞரணி தலைவராக ஆக்கி இருந்தால், சும்மாதானே இருந்திருப்பாய் என்று அவரது அம்மா கேட்க, அதற்கு அருகில் இருந்த பாட்டிலை எடுத்து அம்மா மீது வீசினார். ஆனால் அவர் மீது படவில்லை. இதெல்லாம் ஒரு சாம்பிள் தான் என்று கூறிய நிலையில், மாமல்லபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி தனது தாயாருடன் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.