தி.மு.க உட்கட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், திமுக தலைவர் பதவிக்கு அண்ணா அறிவாலத்தில் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தின் ஆளும் கட்சியான திமு.க.வில், பேரூராட்சி மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு ஏற்கனவே தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலுக்கன வேட்புமனு தாக்கல் தி.மு.க.வின் தேர்தல் அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய வேட்புமனு தாக்கல் மாலை 5 மணிவரை நடைபெற்றது. இதில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தணிக்கைக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு வேட்புமனுதாக்கல் நடைபெற்றது.
இதில் தி,மு.க. தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்கள் அனைவரும் விருப்பம் தெரிவித்தை தொடர்ந்து, விருப்ப மனு தாக்கல் செய்தனர். அதேபோல் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே இன்று தி.மு.க தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின், பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு, பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் என் மூவரும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். கடந்த 2018-ம் ஆண்டு தி.மு.க தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் தற்போது 2-வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.
சென்னையில் நாளை மறுநாள் (அக்டோபர் 09) நடைபெறும் தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“