இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று துவங்கியது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று காலை திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கை பதிவு செய்த தி.மு.க முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இந்தியாவில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் இண்டியா கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றும் என்று கூறினார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி சேலம் தொகுதி தனது கோட்டை என சொல்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த கே.என்.நேரு சேலத்தில் செல்வகணபதி நிச்சயம் வெற்றி பெறுவார். தமிழ்நாட்டில் பா.ஜ.க டெபாசிட் இழப்பார்களா என்பதற்கு நான் பதில் சொல்ல முடியாது மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்றார். இந்தியா கூட்டணி பெரும்பான்மை இடங்களில் ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெறும் எனப் பேசினார்.
முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் இதுவரை பொதுமக்கள் யாரும் வாக்குச்செலுத்த வரவில்லை. ஏற்கனவே, அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில், தற்போது வரை பொதுமக்கள் யாரும் வாக்குச் செலுத்த வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“