தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ1000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக, அமலாக்கத்துறை ஆய்வில் தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது தி.மு.க அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜி, பா.ஜ.க.விடம் சரணடைந்துவிட்டார் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் புகழேந்தி கூறியுள்ளார்.
2014-ம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்கு பின் அதிமுகவில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்த செந்தில்பாலாஜி, 2019-ம் ஆண்டு நடைபெற்ற அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றிருந்தார்.
தற்போது தி.மு.க அமைச்சரவையில், மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு காலால் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில், ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்தார். ஒரு கட்டத்தில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியில் வந்த செந்தில் பாலாஜி, தற்போது மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு காலால் துறை அமைச்சராக இருந்து வருகிறார். இதனிடையே கடந்த வாரம், தமிழக டாஸ்மாக் நிர்வாகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின் முடிவில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ1000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து எதிர்ட்சிகள், விசாரணை தேவை என்று கூறி வரும் நிலையில்’, பா.ஜ.க தரப்பில், ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், டாஸ்மாக் நிர்வாகத்தில் முறைகேடு நடந்துள்ள நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி பா.ஜ.கவிடம் சரணடைந்துவிட்டார் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் புகழேந்தி கூறியுள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தி.மு.கவின் மும்மொழி கொள்கை எதிர்ப்பு, தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு, உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எனது பாராட்டுக்கள். முதல்வரையும் இந்த அரசின் செயல்பாடுகளையும் பாராட்டுகிறேன். டாஸ்மாக் நிர்வாகத்தில் ஊழல் நடந்திருக்கிறதா இல்லையா என்பதை செந்தில் பாலாஜியிடம் கேட்டால் தெரிந்துவிடும். இந்த ஊழலில் ஈடுபட்டவர் இந்நாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பா.ஜ.க.விடம் சரணடைந்திருக்கிறார்.
தமிழக அரசு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பா.ஜ.க.விடம் சரணடைந்ததால் தான் அவர் ஜாமினில் வெளியில் வந்தார். இது தெரியாமல் தி.மு.க அரசு இருக்குமானால் அதை அவர்கள் தான் அனுபவிக்க வேண்டும். செந்தில்பாலாஜியால் திராவிட முன்னேற்ற கழகம், பல சங்கடங்களையும் இன்னல்களையும் சந்திக்க நேரிடும். செந்தில் பாலாஜி ஏற்கனவே பா.ஜ.க.விடம் சரணடைந்துவிட்டார் என்று புகழேந்தி கூறியுள்ளார்.