திருச்சி மணப்பாறையில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான மாபெரும் கபடி போட்டியினை தொடங்கிய வைத்த திமுக விளையாட்டு அணி மாநில செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதிமாறன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
அவசர கதியில் பாராளுமன்றத்தை இப்போது கூட்டுகிறார்கள். பிரதமர் மோடி ஆகஸ்ட் மாதத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவே இல்லை. இப்போதும் மணிப்பூர் விவகாரம் குறித்து பேச மறுக்கிறார். வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமர் இதுவரை மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை.
பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டும்போது எதற்காக அது கூட்டப்படுகிறது என்பதை தெரிவித்துவிட்டு கூட்ட வேண்டும். ஆனால் இதுவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இப்போது நடக்க இருக்கும் சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என்கிறார்கள் அதுவும் ஏன் என்று தெரியவில்லை.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய தனியாக குழு ஒன்றை அமைத்து இருக்கிறார்கள். அந்த குழுவில் தென்னிந்தியாவை சேர்ந்த எந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை இடம்பெறவில்லை. அதே போல தேர்தல் ஆணையத்தை சேர்ந்த அதிகாரிகள் யாரும் இந்த குழுவில் இல்லை. முதல் முறையாக பதவியில் இருந்து விலகி சென்ற குடியரசு தலைவரை ஒரு குழுவின் தலைவராக நியமித்து இருக்கிறார்கள். அதுவும் ஏன் என்று தெரியவில்லை.
கோமாளியை ரசிக்கலாம், ஆனால் கோமாளி கையில் ஆட்சியை கொடுத்தால் மன்றமே சர்க்கஸ் கூடாரமாக மாறிவிடும் என்பதற்கு தற்போது நடக்கும் ஆட்சியே உதாரணம். மோடி அமைத்திருக்கும் கூட்டணியில் சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை தான் இருக்கிறார்கள். ஆனால் இந்தியா கூட்டணி என்பது மக்கள் கூட்டணி. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகிய மூன்றிலும் தோல்வி அடைந்ததால் கஷ்டமாக இருக்கிறது என ஒரே முறை தோல்வி அடைந்து விடலாம் என்பதற்காக தான் இப்போது ஒரே நாடு, ஒரே தேர்தலை அ.தி.மு.க தற்போது ஆதரிக்கிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதையே தான் நானும் தெரிவிக்கிறேன். சி.ஏ.ஜி ஊழல் அறிக்கை என்பது மிகப்பெரிய ஊழல். அதை இப்போது மூடி மறைக்க பார்க்கிறார்கள். அதே போல அதானி பிரச்சனை இது போன்ற பிரச்சனைகளை திசை திருப்ப அவர்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள். நாட்டில் முக்கிய பிரச்சனை இருக்கும் போது மக்களை அதிலிருந்து திசை திருப்பவே இது போன்ற தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி அவர்களின் தவறை மறைப்பது தான் மோடியின் வேலை.
2024-ம் ஆண்டு இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற உடன் நீட்டுக்கு விதி விலக்கை கொண்டு வருவோம் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி உள்ளிட்ட திமுக முக்கிய பிரமுகர்கள் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.