மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த திமுக எம்.பி கனிமொழி ஆறுதல் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் அரசியலில், தனக்கென தனி பாதை வகுத்து முக்கிய தலைவராக வலம் வந்த விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த டிசம்பர் 28-ந் தேதி மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடல், டிசம்பர் 29-ந் தேதி 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள், தொண்டர்கள், அவர் மறைவுக்கு வராத திரையுலக பிரபலங்கள் என பலரும் விஜயகாந்த் நினைவிடத்தில் அவருக்கு மரியாதை செலுத்தி வரும் நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்திலும் அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் இருவரையும் சந்தித்து ஆளுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி இன்று பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து விஜயகாந்த் மறைவுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
தனது தாயார் தாயாளு அம்மாளுடன் விஜயகாந்த் வீட்டுக்கு சென்ற கனிமொழி விஜயகாந்த் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன் விஜயபிரபாகரன் ஆகியோரை சந்தித்து தனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தார். கடந்த 24-ந் தேதி சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் விஜயகாந்தின் திருவுருவ படத்தை திறந்து வைத்து குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“