/indian-express-tamil/media/media_files/2025/03/03/iPyN7aigW39ulUOM4a71.jpg)
எதிர்க்கட்சிகளும், எதிர் கருத்துக்களும் தான் ஒன்றிய அரசுக்கு பிரச்னை" சபாநாயகரின் புதிய உத்தரவு ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகவே உள்ளது என கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதனால், திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று தொகுதி மறுவரையறை குறித்து வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட் அணிந்து கொண்டு சென்றனர். மக்களவையில் இதுகுறித்து விவாதம் நடத்த தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், தொடர் அமளி காரணமாக அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு, நாளை வரை அவையை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதனையத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கூறுகையில்,
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த மிக முக்கியமான தொகுதி மறுசீரமைப்பு என்ற பிரச்சனையை, திராவிட முன்னேற்றக் கழகமும், இந்தியா கூட்டணிக் கட்சிகளும் பாராளுமன்றத்தில் தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைத்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால், அதைப் பற்றி விவாதிக்கவும், பேசவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அனுமதிக்கவில்லை.
இன்று நாடாளுமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு, மக்களவையில் தொகுதி மறுசீரமைப்பு குறித்துப் பேச வேண்டும் என்று நாங்கள் எழுந்து நின்று கோரிக்கை வைத்தபோது, முன் எப்போதும் இல்லாத வகையில் அவை தலைவர், எங்களுடைய உடைகளின் குறையைக் கண்டுபிடித்து டி-ஷர்ட் (T-Shirt) அணிந்து அவைக்கு வரக்கூடாது என்ற ஒரு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சட்டத்தைச் சொல்லி, நீங்கள் சட்டை மாற்றவில்லை என்றால் அவை நடக்காது என்று ஒரு விஷயத்தை முன்வைத்தார்.
நாங்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த முறையும், அவை கூடியபோது நாங்கள் சட்டையை மாற்றாமல், எங்களுடைய கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தினோம். அதைத் தொடர்ந்து, இன்று நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவித்தார். இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பல முறை, வாசகங்கள் பாதிக்கப்பட்ட முகக்கவசம், உடைகள், சால்வைகள் அணிந்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் வந்துள்ளார்கள்.
ஆளுங்கட்சி எம்.பிக்கள் கூட, அவர்களின் நம்பிக்கைகளையும், கருத்துக்களையும் வலியுறுத்தக் கூடிய கருத்துக்கள் பாதிக்கப்பட்ட சால்வைகளை போட்டுக்கொண்டு அவையில் அமர்ந்து இருக்கிறனர். ஆளுங்கட்சியினர் செய்யும்போது, ஏற்றுக்கொள்ளக்கூடிய அவை தலைவர். எங்களை மட்டும் உடையை மாற்றிக் கொண்டு வர வேண்டும் என்று கட்டளையிடும் போது, இது ஜனநாயக விரோதமாகவும், எதிர்க்கட்சிகளுக்கு விரோதமான செயலாகத்தான் பார்க்க முடிகிறது.
ஒன்றிய அரசுக்கு உடை பிரச்சனையா இல்லை தொகுதி மறுசீரமைப்பு என்ற பிரச்சனையை எழுப்பக்கூடாத? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, உடை பிரச்சனையோ, தொகுதி மறுசீரமைப்பு என்ற பிரச்சனை இல்லை. எதிர்க்கட்சிகள் இல்லாமல் அவையை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஒன்றிய அரசுக்கு இருக்கிறது. எதிர்க் கட்சிகளும், எதிர்க் கருத்துக்களும் ஒன்றிய அரசுக்குப் பிரச்சனை தான்.
மேலும், எதிர்க் கருத்துக்களே இல்லாத, பாஜகவின் எம்.பிக்களை போல வாழ்க வாழ்க என்று கோஷம் எழுப்பினால், அவை அமைதியாகவும், சிறப்பாகவும் நடப்பதாக ஏற்றுக்கொள்வார்கள். அவர்களுடைய கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களையோ, நம்முடைய கொள்கை சார்ந்த கருத்துக்களை முன்வைத்தாலும் ஒன்றிய அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாஜகவின் ஆட்சியில் நாடாளுமன்றத்தில் நாட்கள் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
பிரதமர் அவையில் இருக்கக்கூடிய நாட்களை விரல்விட்டு எண்ணி விடலாம், அந்த அளவுக்கு குறைவான நாட்கள் தான் நாட்டின் பிரதமர் அவையில் இருக்கிறார். அவர்களுக்கு நாடாளுமன்றத்தின் மீது எந்த அளவுக்கு மரியாதை இருக்கிறது என்பதில் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையைத் தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கிறோம். வரக்கூடிய 22ஆம் தேதி, தமிழ்நாட்டு முதல்வர் முன்னெடுப்பில் நாடு முழுவதும் எந்தெந்த மாநிலங்கள் தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படுமோ, அந்த மாநிலங்களைச் சார்ந்த முதலமைச்சர்கள், தலைவர்கள் எல்லோரையும் அழைத்து ஒரு கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்காக சென்னைக்கு அழைத்து இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், நாளை நாடாளுமன்ற வளாகத்தில் நிச்சயமாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, அவையிலும் கருத்துக்களை விவாதிக்க வேண்டும் என்று குரல் எழுப்புவோம். வழக்கம்போல, அவர்கள் அனுமதிப்பார்களா இல்லையா என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. எங்களுக்கு ஒரு நியாயமான மறுசீரமைப்பு (Fair Delimitation) என்ற உறுதியை ஒன்றிய அரசாங்கம் தெளிவுபடுத்தும் வரை, இந்தப் போராட்டம் தொடர்ந்தது நடைபெறும்.
டி-ஷர்ட் அணிந்ததால் தமிழ்நாட்டு எம்.பிக்களை இடைநீக்கம் (Suspend) செய்ய வேண்டும் என்று பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை வைத்துள்ளார் என்று கேள்விக்கு, எதிர்க்கட்சிகள் இல்லாமல் அவையை நடத்த முடியும் என்றால்? எதிர்கட்சியினரை இடைநீக்கம் செய்துவிட்டால், அவர்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய எம்.பிக்கள் மட்டும் தான் அவையில் இருப்பார்கள். எதிர்க்கட்சியினர் இல்லாத அவையை மகிழ்ச்சியுடன் நடத்துவார்கள் என்று பதிலளித்தார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.