திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்து புள்ளம்பாடி ஒன்றியம் கோவண்டாக்குறிச்சி ஊராட்சியில் பேனியன் பால்ம், (Banyan Balm ) சார்பில் அமைக்கப்பட்டுள்ள மனநலம் மற்றும் சமூக பராமரிப்பு வள மையத்தினை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
நாட்டில் வேலையில்லாத திண்டாட்டம், ஜாதி, மத பிரச்சனைகள் என்று ஒரு நிலையில்லாத சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எப்போது? யாருக்கு மனநிலை பாதிக்கப்படும் என்பது தெரியாத நிலையில் உள்ளோம். எனவே, மனநலம் சார்ந்த ஒரு கொள்கையை தமிழக அரசு வகுத்துக் கொண்டிருக்கிறது.

கொரோனா உள்ளிட்ட எந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், குணமடைந்த பின்னர் அவர்கள் வீடு திரும்பி விடுகிறார்கள். ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் வீடு திரும்புவது தான் சிக்கலாக இருக்கிறது.
மூன்றாம் பாலினத்தவர், திருநங்கைகள் என்று இந்த சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட அனைவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுத்து, அவர்களாலும் இந்த சமூகத்துக்கு உரிய பங்களிப்பு வழங்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் மறைந்த முதல்வர் கலைஞர்.
இந்தியாவிலேயே முதன்முதலாக திருநங்கைகளுக்கு என்று தனி நலவாரியம் அமைத்தது முன்னாள் முதல்வர் தலைவர் கலைஞர் தான். அவரது வழியில் தற்போதைய தமிழக அரசும், முதல்வர் ஸ்டாலினும் செயல்பட்டு வருகிறார்கள் என பேசினார்.
மனநல இல்லங்களை திறப்பதற்காக மனநலம் சார்ந்த கொள்கைகளை அரசு வகுத்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சி காலாவதியாகிவிட்டதாக கவர்னர் கூறியுள்ளார். காலாவதியான பதவியில் இருப்பவர்கள் பேசுவதை எல்லாம், நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், எஸ்.பி., சுஜித்குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கலந்துகொண்டனர்.
முன்னதாக இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த கனிமொழியை அமைச்சர்கள் கே. என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“