சீர்காழியில், அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி, 16 வயது சிறுவனதால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில், அந்த குழந்தையே தவறாக நடந்துகொண்டுள்ளது என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசியதற்கு, தி.மு.க. எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மூன்றரை வயது சிறுமி, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி அங்கன்வாடி மையத்தில் உணவு சாப்பிட்டுவிட்டு, விட்டு வெளியே வந்த அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான 16 வயது சிறுவன் சாக்லேட் வாங்கி கொடுத்து தனியே அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்றுள்ளான். இதனால் சிறுமி சத்தம்போட்டு அழுததால் அதிர்ச்சியடைந்த சிறுவன், சிறுமியை கல்லால் தலையில் கொடூரமாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் காரணமாக தலையில் பலத்த காயமடைந்த சிறுமி சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்ததை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், குழந்தையின் இந்த நிலைமைக்கு காரணமான அந்த 16 வயது சிறுவனை கைது மகளிர் போலீசார் நீதிபதி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, சீர்காழியில் அங்கன்வாடிக்கு சென்ற சிறுமி 16 வயது சிறார் குற்றவாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தலை மற்றும் கண் சிதைக்கப்பட்ட சம்பவத்தில் குழந்தையே தப்பாக நடந்திருக்கிறது, எனக்கு கிடைத்த ரிப்போர்ட்டின் படி, அந்த குழந்தை சிறுவனின் முகத்தில் துப்பியது தான் இந்த சம்பவத்திற்கு காரணம். எனவே, இரண்டு தரப்பிலும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
இதுபோன்ற விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தருவது குறித்து பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆட்சிரின் இந்த கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், ஆட்சியர் மகாபாரதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, மயிலாடுதுறைக்கு புதிய ஆட்சியராக, ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்நியமனம் செய்து, தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
ஆட்சியரின் சர்ச்சை பேச்சு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள, தி.மு.க எம்.பி கனிமொழி, குழந்தைகளுக்கு எதிராக இப்படியான கருத்துகளைப் பேசும் நபர்கள் எப்படி தங்களைப் படித்தவர்கள் என்றும், மனிதர்கள் என்றும் கூறிக்கொள்கிறார்கள். நாம் ஏன் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கனிமொழியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.