Advertisment

கூட்டணிக்கு பா.ஜ.க விடுத்த அழைப்பு: உடைத்துப் பேசிய டி.ஆர் பாலு

தி.மு.க எங்களுடன் இருந்தால் என்ன என பா.ஜ.க வினர் வெளிப்படையாக கேட்கிறார்கள். அவர்களிடம் நான் உங்களிடம் சேர்ந்தால் நாங்கள் தேறாமல் போய் விடுவோம் என கூறினேன்.

author-image
WebDesk
New Update
கூட்டணிக்கு பா.ஜ.க விடுத்த அழைப்பு: உடைத்துப் பேசிய டி.ஆர் பாலு

திருச்சி பொன்மலைப்பட்டியில் நடைபெற்ற திமுக ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட தி.மு.க பொருளாளரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு பேசுகையில்;

Advertisment

திருச்சி மிகச்சிறந்த மாநகரம் மட்டுமல்ல. நமது இயக்கத்துக்கான முன்னோடிகளை தந்த மாவட்டம். தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் மக்களுக்கு கொரோனா நிவாரணம், கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம், பெட்ரோல் விலை ரூ.3 குறைவு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், 12,21,000 பேருக்கு நகைக்கடன் ரத்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை ஒதுக்கீடு இப்படி பல்வேறு திட்டங்கள் ஓர் ஆண்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

திராவிட மாடல் என ஸ்டாலின் கூறுகிறார். திராவிட மாடல் என்பது பலருக்கு புரியவில்லை. அண்ணா, கலைஞர் இருவரும் திராவிட மாடல் ஆட்சி தான் நடத்தினார்கள். கடமை, கண்ணியம், கட்டுபாடு என அண்ணா சுருக்கமாக கூறினார். கலைஞர் ஐம்பெரும் முழக்கங்களை முன் வைத்து ஆட்சி நடத்தினார். அவர்கள் கூறியதன் அடிப்படையிலும் மாநில சுயாட்சியை முன்னிருத்தி தற்போது ஆட்சி நடைபெறுகிறது.

மாநில சுய ஆட்சி இல்லையென்றால் சமூக நீதி வருவதற்கு வாய்ப்பில்லை. மாநில சுய ஆட்சியும் சமூக நீதியும் இணைத்து செயல்படும் ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. மாநில சுயாட்சி என்பது அடிப்படை தேவை. மாநில சுயாட்சிக்காக கலைஞர் ராஜமன்னார் குழுவை அமைத்தார். அந்த குழுவின் பரிந்துரை வந்த பின்பு நாடே அது குறித்து பேசியது.

மத்திய அரசில் அதிகார குவியல் இருந்தது அதனை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என ஜோதிபாசு, பரூக் அப்துல்லா உள்ளிட்ட பல மாநில முதலமைச்சர்கள் மத்திய அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள். சர்க்காரியா கமிஷன், வெங்கடாச்சலயா கமிஷன் உள்ளிட்ட குழுக்கள் மத்திய அரசு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என கூறியது. ஆனால் காங்கிரஸ் அரசும் அதை செய்யவில்லை, பா.ஜ.க அரசும் செய்யவில்லை. கிட்டத்தட்ட 51 ஆண்டுகளாகியும் மாநில சுயாட்சி குறித்து இன்றும் பேசப்படுகிறது. தி.மு.க அரசு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினரும் விரும்புகிறார்கள்.

publive-image

தி.மு.க தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி குறித்து நாடு முழுவதும் எடுத்து செல்ல வேண்டும். சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமையை அனைத்து முதலமைச்சர்களுக்கும் பெற்று தந்தது கலைஞர் தான். அவரின் மகன் ஸ்டாலின் மத்திய அரசின் பிடரியை பிடித்து உலுக்கும் தைரியம் பெற்றவர். தி.மு.க எங்களுடன் இருந்தால் என்ன என பா.ஜ.க வினர் வெளிப்படையாக கேட்கிறார்கள். அவர்களிடம் நான் உங்களிடம் சேர்ந்தால் நாங்கள் தேறாமல் போய் விடுவோம் என கூறினேன்.

தி.மு.க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால் பா.ஜ.க வினர் மிகுந்த வெறுப்புடன் இருக்கிறார்கள். மாநில சுயாட்சி ஒரு தண்டவாளம், சமூக நீதி ஒரு தண்டவாளம் இரண்டும் இருந்தால் தான் திராவிட மாடலை முழுமையாக பெற முடியும். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை கேஸ் விலையை உயர்த்தி கொண்டு செல்கிறார்கள், அதில் பல லட்சம் கொள்ளை அடித்துள்ளார்கள். பல்வேறு வரிகளை உயர்த்தி வருகிறார்கள்.

இவையெல்லாம் தாண்டி திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. தி.மு.க அரசு ஓர் ஆண்டில் மூன்றில் இரண்டு பங்கு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற ஸ்டாலின் கரத்தை அனைவரும் வலுப்படுத்த வேண்டும் என்றார்.

கூட்டத்தில் திருச்சி மாவட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment