தி.மு.க இளைஞரணி தலைவரும், தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதியை பார்த்து அனைத்து மாநில தலைவர்களும் பயந்துகொண்டு இருக்கிறார்கள் என்று திமுக எம்.பி டி.ஆர் பாலு கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் நேற்று நடைபெற்ற தி.மு.க – வின் 75-வது ஆண்டு பவள விழா மற்றும் முப்பெரு விழாவில், தி.மு.க தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டடோருடன் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் செயலில் 50 சதவீதம் நாங்களும் செய்வோம் என்று பேசியிருந்தார். இது குறித்து அடுத்து பேசிய திமுக முக்கிய தலைவரும் எம்.பியுமான டி.ஆர் பாலு, உதயநிதி ஸ்டாலின் ரொம்ப அடக்கமாக பேசுகிறார் என்று நினைக்கிறேன். அப்பாவாக இருந்தாலும் போட்டி என்று வந்துவிட்டால் வேறு எதுவும் இருக்க கூடாது.
அவர் முதல்வருக்கு நிகராக செய்வோம் என்று சொல்லாமல் 50 சதவீதம் செய்வோம் என்று அடக்கமாக பேசுகிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை அப்படியே செய்ய வேண்டும். நீங்கள் எந்த அளவுக்கு பாய்வீர்கள் என்று சொல்ல வேண்டும். ஆனால் உதயநிதி தன்னை தாழ்த்திக்கொண்டு இங்கு பேசியுள்ளார். ஆனாலும் அவர் மிக்பெரிய வெற்றியை பெறுவார் என்று நினைக்கிறேன்.
தி.மு.க இவ்வளவு செய்த பிறகும் மக்கள் மாற்றி வாக்களிக்க மாட்டார்கள். ஆனாலும் தொண்டர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். ஒரு பக்கம் இளைஞரணி சிறப்பாக கொடிக்கட்டி பறந்துகொண்டிருக்கிறது. இளைஞரணியை பார்த்தால் இந்தியாவே பயந்து நடுக்குகிறது. இந்தியாவில் உள்ள அத்தனை தலைவர்களும் நமது இளைஞரணி தலைவரை பார்த்து அடுத்து என்ன செய்யப்போகிறார்களோ என்று பயந்துகொண்டிருக்கிறார்கள்.
எல்லாம் பொறாமை தான் வேறொன்றும் இல்லை. உதயநிதி மற்றும் அவரது அப்பாவை பார்த்தால் மட்டும் தான் பயப்படுகிறார்கள். வேறு யாரை பார்த்தும் பயப்படுவதில்லை. உதயநிதி சொல்லாத வார்த்தைகளையும் அவர் சொன்னதாக கூறி வருகிறார்கள். இந்தியா கூட்டணியில் உள்ளவர்களே உதயநிதி இப்படி செய்துவிட்டாரே என்று என்னிடம் சொல்கிறார்கள். நான் அவர்களுக்கு விளக்கம் கொடுத்து வருகிறேன். இதற்காக நாம் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“