தி.மு.க.வின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாகவும் அற்ப காரணங்களுக்காக அனுமதி கோரிக்கையை நிராகரிப்பதாகவும் தி.மு.க சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில், முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுச்சேரி, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் நடைபெற உள்ளது. இதில் 39 தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள் என பலரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த தேர்தலில் மக்களை நேரடியாக சந்திப்பதோடு மட்டுமல்லாமல் அரசியல் கட்சியின் சார்பில், இணையதளம், தொலைக்காட்சி உள்ளிட்ட பல வழிகளில் வீடியோ மற்றும் போட்டோ விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க. சார்பில் ஸ்டாலின் குரல் என்ற தேர்தல் பிரச்சார பாடல் தொலைக்காட்சி, மற்றும் இணையதளங்களில் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் மத்தியிலும் இந்த விளம்பரத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
இதனிடையே இந்த விளம்பரத்தில்,‘இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்’ என்று மு.க.ஸ்டாலின் கூறியிருப்பார். இந்த விளம்பரங்களுக்கு முன் அனுமதி பெறுவது தொடர்பான தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், இந்த தேர்தல் விளம்பரம் விதிகளுக்கு எதிராக இருக்கிறது என்று கூறி அனுமதி மறுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் இந்த செயல் தி.மு.கவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் இந்த முடிவை எதிர்த்து, தி.மு.க அமைப்பு செயலாளர் எஸ்.ஆர்,பாரதி சென்னை உயர்நீதிம்னறத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், மார்ச் 2023 புதிய விதிகளின் படி அரசியல விளம்பரங்களுக்கு மாநில சரிபார்ப்பு குழு அனுமதி வழங்க வேண்டும். இந்த விளம்பரங்கள் இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அனுமதி மறுக்கப்படலாம். ஆனால் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் இல்லாமல், விளம்பரத்திற்கு அனுமதி மறுத்துள்ளது.
தி.மு.க. தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது. அற்ப காரணங்களுக்காக தி.மு.க விளம்பரங்கள் நிராகரிக்கப்படுகின்றன. தமிழ்நாடு தேர்தல் அதிகாரி அனுமதி நிராகரித்ததை ரத்து செய்து விளம்பரங்களுக்கு உரிய அனுமதி வழங்கிட உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி சத்யநாராயண பிரசாத் அமர்வில் 15-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“