தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியார் இருவரும் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்கள். இன்று நான் உடலுறுப்பு தானம் செய்வதாக பதிவு செய்துள்ளேன். ஏராளமானோர் உடல், உறுப்புகளை தானம் செய்வதால், தமிழக முதல்வர் மகிழ்ச்சி அடைவார் என்று திருச்சி சிவா கூறினார்.
திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரி, மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி, இந்திய குழந்தைகள் மருத்துவ கழகம் ஆகியவை இணைந்து, உடல் உறுப்பு தானம், குருதிக் கொடை வழங்கும் விழிப்புணர்வு முகாமை இன்று நடத்தினர். இந்த விழாவில் பங்கேற்ற, திமுக கொள்கைப்பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா பேசியபோது, தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக அறிவித்தார்.
அவரைத் தொடர்ந்து, உடல் உறுப்புகள் தானம் செய்வதற்கு, கல்லூரியின் முன்னாள், இன்னாள் மாணவர்கள் தாமாக முன்வந்து பதிவுச் செய்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, திருச்சி சிவா எம்.பி "திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் படித்த, படிக்கின்ற மாணவ, மாணவியர்கள் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்தவர்கள். தங்களது உழைப்பினால் கிடைக்கின்ற சொற்ப உணவில் சேகரித்த குருதியை தற்போது தானமாக வழங்கி வருகின்றனர்.
இவர்களின் குருதியை தனியார் மருத்துவமனைகளில் கொடுத்தால் வியாபாரம் ஆகிவிடும். எனவே, இக்கல்லூரி மாணவ, மாணவியரை போல ஏழை, எளிய மக்கள் வரக்கூடிய அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகளுக்கு குருதி முழுவதும் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் அரசு மருத்துவமனைகளுக்கு, குருதித் தானம் வழங்கினர்.
தொடர்ந்து, உடல் உறுப்பு தானம் செய்வதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால், முன்னாள் மாணவர்கள் தங்கள் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அரசு மருத்துவமனையில் பதிவு செய்துள்ளனர். அதன் ஒருபகுதியாக, நானும் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதற்கு பதிவு செய்துள்ளேன். ஏற்கனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியார் இருவரும் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்கள். இன்று நான் உடலுறுப்பு தானம் செய்வதாக பதிவு செய்துள்ளேன்.
இங்கு ஏராளமானோர் உடல், உறுப்புகளை தானம் செய்வதால், தமிழக முதல்வர் மகிழ்ச்சி அடைவார். இன்று நானும் உடலுறுப்புகளை தானமாக வழங்க அறிவித்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று குறிப்பிட்டார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது தந்தை பெரியார் அரசு கல்லூரி முதல்வர் வாசுதேவன், இந்திய குழந்தைகள் மருத்துவக் கழக தலைவர் டாக்டர் பத்மபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
க.சண்முகவடிவேல்