காமராஜர் குறித்த சர்ச்சை; ராஜேஷ்குமார் கண்டன அறிக்கை; பேச்சை விவாதப் பொருளாக்க வேண்டாம் என திருச்சி சிவா கோரிக்கை!

நான் எதிர்வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றிப் பேசும்போதுகூட கண்ணியத்தோடு விமர்சிப்பதைப் பலரும் அறிவார்கள் என்று சிவா கூறியுள்ளார்.

நான் எதிர்வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றிப் பேசும்போதுகூட கண்ணியத்தோடு விமர்சிப்பதைப் பலரும் அறிவார்கள் என்று சிவா கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Trichy Siva

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவருமான காமராஜர் குறித்து சர்ச்சை கருத்துக்களை பேசிய தி.மு.க துணைப்பொதுச்செயலாளர் திருச்சி சிவா தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

சென்னை பெரம்பலூர் பகுதியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய, திருச்சி சிவா, காமராஜர் மின்சார தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுவதும் கண்டன கூட்டங்களை நடத்தினார். ஆனால் காமராஜருக்கு ஏசி இல்லையென்றால், உடலில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதியை செய்ய உத்தரவிட்டார் என்றும், காமராஜர், உயிர் போவதற்கு முன் அப்போதைய முதல்வரான கருணாநிதியின் கைகளை பிடித்து கொண்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியதாக தெரிவித்தார்.

திருச்சி சிவாவின் இந்த பேச்சு, இணையத்தில் வைரலாக பரவிய நிலையில்,காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி உள்ளிட்ட பலரும் கடும் கண்டணங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தனது பேச்சுக்கு விளக்கம் அளித்து திருச்சி சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருந்தலைவர் காமராசரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் தன்மையில் நான் பேசியதாகக் கருத்து கொண்டு விவாதங்கள் வலுத்துக் கொண்டு வருகின்றன. நான் எதிர்வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றிப் பேசும்போதுகூட கண்ணியத்தோடு விமர்சிப்பதைப் பலரும் அறிவார்கள்.

கல்விக்கண் திறந்த காமராசர் என்றும், மதிய உணவுத் திட்டத்தின் மூலமாக ஏழை வீட்டுப் பிள்ளைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் வருவதற்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என்பதையும் பல மேடைகளில் உருக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும் நான் பேசுவது வழக்கம்.

Advertisment
Advertisements

“குணாளா! மணாளா! குலக்கொழுந்தே! குடியாத்தம் சென்று வா! வென்று வா!” என்று எழுதிய பேரறிஞர் அண்ணா - காமராசரின் மறைவுக்குப் பின் அவருக்கு அனைத்து மரியாதைகளும் செய்ததோடு, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு அவர் திருப்பெயரைச் சூட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியொற்றி, அவர் பிறந்தநாளை “கல்வி வளர்ச்சி நாளாக” கடைப்பிடித்து அவரின் புகழுக்கு நாளும் மெருகேற்றும் இன்றைய கழகத் தலைவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் பணியாற்றும் நான், மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை எந்த வகையிலும் யார் செய்தாலும் ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல.

நாட்டு விடுதலைப் போரில் பல ஆண்டுகள் சிறையேகி, தியாகத் தழும்பேறி, முதலமைச்சராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் மக்கள் தொண்டாற்றி, எல்லோர் மனதிலும் தனித்த இடம் பிடித்த பெருந்தலைவர் காமராசர் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன் நான். அண்ணா, கலைஞர், ஸ்டாலின் வழியில் - கண்ணியம் காக்கும் கடமை கொண்ட கழகத் தொண்டன்.

இந்த விளக்கத்தினை எல்லோரும் அன்புகூர்ந்து ஏற்று என் உரையில் நான் கூறிய செய்தியினை மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனிடையே தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏ.சி. இல்லாமல் காமராஜர் தூங்கமாட்டார் என்று சொல்லி இருக்கிறார் திருச்சி சிவா. யார் ஏ.சி. இல்லாமல் தூங்கமாட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒரு முதல்வராக அரசினர் விடுதியில் தங்கி வெப்பம் அதிகமாக இருந்ததால், மரத்தடியில் கட்டிலை போட்டு உறங்கியவர் தான் காமராஜர். கூட்டணி தர்மத்தை கருத்தில்கொண்டு நாகரீகமாக என்னுடைய கண்டனத்தை பதிவேற்றம் செய்ய வேண்டி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

K Kamaraj

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: