Dr Anbumani Ramadoss Reply To Dircetor Bharathiraja : ஜெய்பீம் படம் தொடர்பான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை சாதி பிரச்சினையோ, அரசியல் பிரச்சினையோ அல்ல; இது ஒரு சமூக பிரச்சினை என்று இயக்குநர் பாரதிராஜாவுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டியுள்ளனர். இருளர் இன மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம் கடந்த நவம்பர் 2-ந் தேதி ஒடிடி தளத்தில் வெளியானது.
ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றாலும், இந்த படத்தில் தவறான காவல் அதிகரியாக வரும் நடிகரின் வீட்டில் வன்னியர்களின் அடையாளமாக அக்னி குண்டம் பதித்த காலண்டர் உள்ளது. மேலும் அந்த காவல் அதிகாரியின் பெயர் குருமூர்த்தி என்பது வன்னியர் சங்கத்தின் தலைவர் ஜெ குருவை நினைவூட்டுகிறது என்று கூறி பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் 9 கேள்விகளுடன் கடிதம் ஒன்றை சூர்யாவிற்கு அனுப்பினார்.
இதனையடுத்து படத்தில் அக்னி குண்டம் காலண்டர் மாற்றபட்டதை தொடர்ந்து அன்புமணியின் கடிதத்திற்கு நடிகர் சூர்யா பதில் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனாலும் அந்த காவல் அதிகாரியின் பெயர் மாற்றப்படாதது குறித்து பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் சூர்யாவிற்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளனர். மேலும் இது தொடர்பாக சூர்யா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 5 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த வாரம் இயக்குநர் பாரதிராஜா நடிகர் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்து அன்புமணிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில், படைப்பாளிகளுக்கு சுதந்திரம் தேவை. உங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாம். சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் உள்ளன. சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளன. ஒரு அலைபேசியில் முடிந்திருக்க வேண்டியதும் சிறு தவறுகளைச் சுட்டிக் காட்டித் தீர்க்க வேண்டியதுமான இப்பிரச்சனையை எதிர்காற்றில் பற்றியெரியும் நெருப்புத் தூக்கியது ஏன் எனப் புரியவில்லை என கூறியிருந்தார்.
தற்போது பாரதிராஜாவின் கடிதத்திற்கு டாக்டர் அன்புமணி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில்,
அன்புள்ள தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு
வணக்கம்!
ஜெய்பீம் சர்ச்சை தொடர்பாக தாங்கள் எனக்கு கடிதம் எழுதியிருந்தீர்கள். களப்போராளியாகவும், யாருமே துணியாத காலத்தில் சமூகநீதியை திரைப்படத்தில் பதிவு செய்தவர் என்ற முறையிலும், படைப்பாளியாகவும் எனக்கு கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள், மகிழ்ச்சி.

ஒடுக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய உரிமைகளுக்காக போராட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. இன்று தமிழ்நாட்டில் அதிகமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி அவர்களுக்கு சமூக நீதியை பெற்றுத் தந்ததில் மருத்துவர் அய்யாவுக்கு நிகராக இங்கு வேறு யாரும் இல்லை.
ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை ((Jai Bhim Controversy) சாதி பிரச்சனை அல்ல, அரசியல் பிரச்சனையும் அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை.


தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் பெருங்குடி சமுதாயமான வன்னியர் சமூகம் திட்டமிட்டு தொடர்ந்து இழிவுபடுத்தப்படுவது தொடர்பான சமூகப் பிரச்சனை. இந்த பிரச்சனையில் உங்களுக்கும் திரைத்துறையினருக்கும் மிகப் பெரிய புரிதல் இல்லை என்பது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது

ஜெய்பீம் திரைப்படத்தில் சாதி வெறி பிடித்த கொடுமைக்கார சைக்கோ காவல் உதவி ஆய்வாளர் (வில்லன்) இல்லத்தில் மாட்டியிருக்கும் காலண்டரில் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டம் இல்லாமல் நீங்கள் போற்றி வணங்கும் தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று முழக்கமிட்ட தேவர் திருமகனாரின் படம் இருந்தால் நீங்களும், தேவர் சமுதாயமும் சும்மா இருப்பீர்களா? அல்லது கொங்கு மக்களால் கடவுளுக்கு இணையாக வழங்கப்படும் வீரத்தின் விளைநிலம் தீரன் சின்னமலை அவர்களின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாட்காட்டி இருந்திருந்தால் அவர்கள் கொதித்து எழுந்து இருக்க மாட்டார்களா?

அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? படைப்புச் சுதந்திரம் என்று சும்மா இருந்து இருப்பீர்களா? ஆனால் ஒன்றை மட்டும் சொல்கிறேன், மேற்கண்டவற்றில் எந்தக் காட்சி அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தாலும் அதை கண்டித்தும் முதல் குரல் என்னிடமிருந்து தான் வந்திருக்கும் என்று கூறியுள்ளார் தற்போது அவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த பதிவு வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil