கோவை போத்தனூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவை தந்தை பெரியார் கழகம் சார்பில் மேடை அலங்காரம் மற்றும் மக்கள் பணியில் 35 ஆண்டுகள் சமூகப் பணியாற்றிய டிஸ்கோ காஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின் சந்தித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, கோவை மாநகரில் 35 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி சமூக சேவையிலும் தன்னுடைய மக்கள் சேவையை தொடர்ந்து செய்து வருகின்ற டிஸ்கோ காஜா விற்கு அனைத்து கட்சியின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் நடந்து கொண்ட முறை சட்டமன்றத்தின் மாண்பை சிதைக்கின்ற வகையில் இருந்தது. நாடு முழுவதும் காலம் காலமாக அரசு தயாரித்து கவர்னர்களால் முன்மொழிவது போல தான் கவர்னர்களின் உரை இருக்கும்.
கவர்னர் உரை என்பது கவர்னரால் ஆற்றக்கூடிய உரை அல்ல. அவர் விரும்பியதை ஆற்றுவது அல்ல. அந்தந்த மாநில அரசுகள் தருகின்ற உரையை தான் ஆளுநர்கள் வாசிப்பார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை குறை சொல்வது போல் அரசுக்கு ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவது போல் செயல்படுகின்றனர். மக்களுக்கான திட்டங்களை தான் தமிழ்நாடு அரசு வகுத்துக் கொடுத்துள்ளது.
இந்த திட்டத்தில் குறை இருந்திருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து வேறு உரையை மாற்றி தர கோரி இருக்க வேண்டும். அவர் விரும்பியதை உரையாற்றுவதற்கு இது இடம் இல்லை. தமிழக ஆளுநர் வேண்டும் என்றே சட்டமன்றத்தை புறக்கணிக்கும் வகையிலும் மக்களை அவமானப்படுத்தும் வகையிலும் இந்த செயலை செய்து இருக்கின்றார், தமிழக முதல்வர் நினைத்திருந்தால் ஆளுநர் இல்லாமலேயே இதனை நடத்தி இருக்க முடியும். ஜனநாயகத்தை கருதி மரியாதை நிமித்தமாக ஆளுநரை அழைத்துள்ளார்.
ஆளுநர் அவரது மரியாதையை காப்பாற்றிக் கொள்ளவில்லை என்பதை தமிழக மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் தமிழக ஆளுநர் சட்டமன்றத்தில் மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக தமிழக மக்களுக்கு எதிராக இது போன்ற செயலை செய்து கொண்டிருக்கிறார். இது தொடருமானால் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆளுநருக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“