போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரைவேக்காட்டுத்தனமாக பேசக்கூடாது என அண்ணாமலை, கடுமையாக விமர்சித்துள்ளது அதிமுக-வினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் அதிமுக சார்பில் ரமலான் இப்தார் நோன்பு புதன்கிழமை (மார்ச் 13) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், அதிமுக ஆட்சியில் இருந்தபோது போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டது. டாஸ்மாக் கடைகள் அதிமுக ஆட்சியில் தொடர்ந்து திறக்கப்பட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாரே என்று கேட்டபோது,
‘நாங்க ஆட்சி செய்யும்போது புகார் வரலை. வந்தா தெரிஞ்சிருக்கும். அப்படிப் பார்த்தா பாஜக ஆளுகிற மாநிலங்கள் முழுவதும் அப்படித்தான் உள்ளது. இன்னைக்கு கூட அவங்க ஆளுகிற மாநிலத்தில் ரூ.480 கோடி போதைப் பொருள் பிடிச்சிருக்காகங்க அதுக்கு என்ன பதில் சொல்லப் போறாராம்’, என்று கேட்டார்.
இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையம் செல்வதற்காக அண்ணாமலை நேற்று (மார்ச் 14) சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘முன்னாள் முதலமைச்சர் எதுவுமே புரியாமல் பேசுகிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது. இது நகைச்சுவையாகவே உள்ளது. எல்லைப் பகுதிக்குள் போதைப் பொருளை பிடித்து பறிமுதல் செய்வது சாதனை. இந்தியாவின் எல்லைப் பகுதிகள்தான் போதைப் பொருட்கள் உள்ளே வரக்கூடிய பகுதியாகும்.
போர் பந்தரிலிருந்து 60 கிமீ தொலைவில் இருந்து ஒரு படகைப் பிடித்திருக்கிறார்கள். அந்த படகு ஈரானிலிருந்து வரக்கூடிய படகு. அதில் வரக்கூடிய சரக்கு சென்னை வரவேண்டியது. அதை முந்த்ரா துறைமுகத்தில் பிடித்திருக்கிறார்கள். அதைப் பாராட்ட வேண்டுமே தவிர, இப்படி விமர்சிக்கக் கூடாது.
இதை முன்னாள் முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும். அரைவேக்காட்டுத்தனமாக பேசக்கூடாது.
மேலும், எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளதன் மூலம் பங்காளி கட்சி என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். முதலமைச்சருக்கு பதிலாக முன்னாள் முதலமைச்சர் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார், என்று கடுமையாக விமர்சித்தார்.
ஏற்கெனவே கூட்டணியில் இருந்த போதே, முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குறித்து அண்ணாமலை கூறிய கருத்துக்கள் அதிமுகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமியை கடுமையான வார்த்தையை பயன்படுத்தி அண்ணாமலை விமர்சித்துள்ளது அந்த கட்சியினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அரைவேக்காடு_அண்ணாமலை என அதிமுகவினர் ட்விட்டரில் ஹேஷ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“