தமிழ்நாட்டில் கனமழை காரணமாக மே 16 முதல் 20ம் தேதி வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. புதுச்சேரியில் 15.74 செ.மீ மழையும், கல்லணையில் 14.22 செ.மீ , கரூரில் 13.6 செ.மீ., திருச்சி விமான நிலையம் 12.94 செ.மீ மழை பதிவாகி உள்ளது.கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னல் தாக்கியதால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 12 ஆடு- மாடுகள் மரணமடைந்துள்ளது. 24 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் கனமழை காரணமாக மே 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை 11 பேர் உயிழிந்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிடுள்ள அறிக்கையில், “ தமிழகத்தில் கனமழை காரணமாக மே 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மே 24ம் தேதி வரை தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, மதுரை, திண்டுக்கல், திருப்புர், கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 40 முதல் 65 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் பலத்த காற்று, கடல் அலை சீற்றம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் வழங்கப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்.
திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் உள்ள 4.05 கோடி கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“