அசூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (20.03.2023) மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. அதில் திருச்சி மாவட்டத்திலும் நேற்று கனமழை பெய்தது. இந்நிலையில், திருவெறும்பூர் அருகே உள்ள அசூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யும் பணி மந்தமாக நடைபெற்று வருவதால், நெல்மணிகள் கொள்முதல் செய்யப்படாமல் குவியல் குவியலாக கொட்டி கிடக்கிறது.
இதனிடையே நேற்று திடீரென மழை பெய்ததால் கொட்டிக்கிடந்த நெல் மணிகள் மழையில் நனைய தொடங்கியது. இதை தடுக்க அங்கிருந்த விவசாயிகள் அவசர அவசரமாக தங்களது நெல்மணிகளை தார்ப்பாய் கொண்டு மூடினார்கள். அப்படி இருந்தும் அந்தப் பகுதியில் பெய்த மழை நீர் வடிவதற்கு வழியில்லாமல் அரசு நெல் கொள்முதல் நிலையம் பகுதியில் தேங்கியது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
எனவே அரசு அசூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள பல ஆயிரக்கணக்கான மூட்டைகள் அளவு உள்ள நெல்மணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/