மின்கட்டண உயர்வு : திமுக சார்பில் 21ம் தேதி ஆர்ப்பாட்டம்

DMK Meet : மின் கட்டண உயர்வு விவகாரம் தொடர்பாக, வரும் 21ஆம் தேதி வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்த இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

By: Updated: July 16, 2020, 01:04:36 PM

தமிழக மக்களை பெரும்பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ள மின்கட்டண உயர்வை கண்டித்து, வரும் 21ம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த காணொலியில் நடக்கும் கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

கொரோனா நோய்த் தொற்று தீவிரமாகப் பரவிவருவதைத் தடுக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிடவும் உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா நோய் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாகப் பரவி வருகிறது. அந்த நோயைக் கண்டறிவதிலோ, நோய்த் தொற்றாளரின் தொடர்புகளைக் கண்டுபிடித்து “கொரோனா சங்கிலித்தொடரை” அறுத்துத் தடுப்பதிலோ, நோய்த் தொற்றாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையிலோ அ.தி.மு.க. அரசு, வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளாமல் – உயிர் காக்கும் சிகிச்சைக்கான கருவிகள், மருந்துகள், கிருமிநாசினிகள் கொள்முதலிலும், மனசாட்சி சிறிதும் இன்றி, ஊழல் – முறைகேடுகள் செய்வதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர்க்கு மருத்துவக் கல்வியில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடுச் சட்டத்தின் கீழ், மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் அகில இந்திய அளவில் 27 சதவீத இடஒதுக்கீட்டையும், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர்க்கு 50 சதவீத இடஒதுக்கீட்டையும் செயல்படுத்திட வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் மருத்துவக் கல்வி இடங்களை அளிக்கும் முறையை அறவே ஒழித்திட வேண்டும் எனவும் மத்திய பா.ஜ.க. அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

“நீட்”தேர்வை ரத்து செய்க : செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நீட் தேர்வை ரத்து செய்யும் அவசரச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் இக்கூட்டம், “பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவக் கல்வி சேர்க்கை நடைபெறும்” என்று உடனடியாக அவசரச் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றிட வேண்டும் என்று அ.தி.மு.க. அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலையில் விரைந்து நீதி கிடைக்க வேண்டும் : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்குதலுக்குள்ளாகி; மனித உரிமைகளை மண்ணில் புதைத்து, கொடூர மனங்கொண்டு ஏற்படுத்தப்பட்ட கொலைவெறிக் காயங்களால் மரணமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் கொலைகளை, “உடல்நலக்குறைவு” “மூச்சுத் திணறல்” என்றெல்லாம், உள்நோக்கத்துடன் சிறிதும் இரக்கமின்றி திசைதிருப்பி விமர்சித்த முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகின்ற வேளையில், குற்றம் புரிந்தவர்களும், அந்தக் குற்றத்தைத் திரையிட்டு மறைக்கக் காரணமாக இருந்தவர்களும் சட்டத்தின் முன்பு தயவு தாட்சண்யமின்றி நிறுத்தப்பட்டு, தாமதம் இல்லாமல் தக்க தண்டனை வழங்கப்பட்டு, நீதி – நியாயம் – நேர்மை காப்பாற்றப்பட வேண்டும் என்றும்; காவல் நிலைய மற்றும் நீதிமன்றக் காவல் மரணங்கள், இனிமேலாவது ஏற்பட்டுவிடாமல் இருக்க விரிவானதொரு பரிந்துரையை மாநில சட்ட ஆணையத்திடமிருந்து பெற்று – அதன் அடிப்படையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் எனவும் இக்கூட்டம் அ.தி.மு.க. அரசை கேட்டுக் கொள்கிறது.

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் “மின்சார திருத்தச் சட்டம் 2020”-ஐத் திரும்பப் பெறுக!

விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய நியமன அதிகாரம் உள்ளிட்ட மாநில அதிகாரங்களைப் பறிக்கும், மத்திய மின்சார திருத்தச் சட்ட மசோதா – 2020, கொண்டு வரப்படுவது, மத்திய – மாநில உறவுகளுக்கு சற்றும் ஏற்றதல்ல என்பதோ டு- கூட்டாட்சித் தத்துவத்தை கேலிக்கூத்தாக்கும் செயலும் ஆகும் என்று இக்கூட்டம் தீர்மானமாகக் கருதுகிறது. ஆகவே, இந்த மின்சார திருத்தச் சட்ட மசோதா 2020-ஐ உடனடியாகத் திரும்பப் பெற்றிட வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய பா.ஜ.க. அரசை கேட்டுக் கொள்கிறது.

கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியிடம் தாரைவார்த்திடக் கூடாது !

தொடக்கத்திலிருந்தே கூட்டுறவு இயக்கத்தில் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கும் தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தை, ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள மத்திய பா.ஜ.க. அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்திற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மாணவர்களின் இறுதி செமஸ்டரை ரத்து செய்க! அனைத்து செமஸ்டர்களையும் ரத்து செய்க!

கொரோனாவின் உச்சகட்ட பாதிப்பில் இருக்கிறது தமிழகத்தின் மாவட்டங்கள். சென்னையிலும் நோய்ப் பாதிப்பு ஒரே தீவிரத்துடன் தொடருகிறது. இந்நிலையில் பல்கலைக்கழகங்கள் சார்பாக நடத்தப்படும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை “செப்டம்பர் மாதத்தில் கண்டிப்பாக நடத்திய தீர வேண்டும்” என்று, நாட்டு நடப்புகளைக் கருத்தில் கொள்ளாமல், உப்பரிகையில் உட்கார்ந்து கொண்டு, மத்திய பல்கலைக்கழக மானியக் குழு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுவதை இக்கூட்டம் முற்றிலுமாக நிராகரிக்கிறது. மாநிலக் கல்வி உரிமையில் தேவையின்றி குறுக்கிடும் அதிகார அத்துமீறலாகவே இந்த நடவடிக்கையை இக்கூட்டம் கருதுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் – கல்லூரிகள் எல்லாம் “கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களாக” பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கால் வெவ்வேறு ஊர்களில் மாணவர்களும், பெற்றோரும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் எழுதுவதற்கும் சாத்தியமில்லை. இதுபோன்ற இக்கட்டான சூழலில் செமஸ்டர் தேர்வுகளை நடத்திட வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் – பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு உள்ளிட்ட மற்ற ஆண்டுகளுக்கான செமஸ்டர் தேர்வுகளையும் ஆபத்தான கொரோனா பேரிடர் அசாதாரண காலம் கருதி ரத்து செய்து – மாணவர்களைத் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்திட வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய – மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது.

தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை முடக்கி வைத்து – ஊழலை மையப்படுத்தி, அதில் கட்டுப்பாடில்லாமல் எப்போதும் திளைத்துக் கொண்டும், நாவடக்கமின்றி நடமாடிக் கொண்டும் இருக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. வேலுமணிக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஜனநாயகத்தைப் போற்றி, மக்கள் பிரதிநிதிகளை மதித்து – தி.மு.க. சார்ந்த ஊராட்சி மன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளைப் புறக்கணிக்கும் எண்ணத்தை அ.தி.மு.க. அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளும் அதேவேளையில் – அ.தி.மு.க. அரசு திருந்தி நியாயமான வழிதேடத் தவறினால், நீதிமன்றத்தை நாடி தீர்வு காணப்படும் என்றும் இக்கூட்டம் எச்சரிக்கிறது.

திருப்போரூர் கழக எம்.எல்.ஏ. மீதான பொய் வழக்கிற்கு கண்டனம் : அ.தி.மு.க. முக்கிய பிரமுகரின் துணையோடு வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு – சட்டமன்ற உறுப்பினர், அவரது தந்தை, அவருடன் சென்ற ஊர்மக்கள் அனைவர் மீதும் பயங்கரத் தாக்குதல் நடத்தி – கொடுங்காயங்கள் விளைவித்து அவர்களது வீடுவரை விரட்டிச் சென்று அழிம்பு செய்தபோது ஆபத்தான நிலையில் – தற்காப்பிற்காக எம்.எல்.ஏ.,வின் தந்தை துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டதை மறைத்து – தவறாக எம்.எல்.ஏ. மீதே பொய் வழக்குப் பதிவு செய்து, தி.மு.க.,வின் நற்பெயரைக் கெடுக்க காவல்துறையைப் பயன்படுத்தியுள்ள அ.தி.மு.க. அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. அங்குள்ள காவல்துறை அதிகாரிகள் இவ்வழக்கில் நேர்மையான புலனாய்வை நடத்த இதுவரை தவறி – அ.தி.மு.க. அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்குத் துணை நிற்பதால் – உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் நிறுத்த இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

ஊரடங்கைப் பிறப்பித்தது – மக்கள் வெளியில் போனால் கோடிக்கணக்கான ரூபாயை அபராதமாக வசூலித்தது – ஆயிரக்கணக்கான வாகனங்களை பறிமுதல் செய்தது எல்லாம் அ.தி.மு.க. அரசு. ஆனால், ஊரடங்குகால மின்கட்டணத்தை குறைக்கக் கோரினால் மட்டும், “நீங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளீர்கள்; அதெல்லாம் கட்டணத்தைக் குறைக்க முடியாது” என்று மக்கள் மீதே பழி சுமத்துவதும் அ.தி.மு.க. அரசே! தவறான கணக்கீடுகளின் அடிப்படையில் ஏற்பட்ட அதிக மின்கட்டணத்தை, எல்லாத் தரப்பிலும் எவ்வளவோ எடுத்துரைத்தும் ஏற்காமல், அனைத்துத்தரப்பு மக்களையும் பெருந்துயரத்திற்கு உள்ளாக்கியுள்ள அ.தி.மு.க. அரசுக்கு மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
அ.தி.மு.க. அரசின் இந்தக் கருணையற்ற போக்கைக் கண்டித்தும், ‘ரீடிங்’ எடுத்ததில் உள்ள குழப்பங்களை மின் நுகர்வோருக்கு சாதகமான முறையில் கணக்கிட்டு – ஊரடங்கு கால மின்கட்டணத்தை குறைக்கக் கோரியும் – குறிப்பாக, முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதில் அந்தத் தொகைக்குரிய “யூனிட்டுகளை” கழிக்க வலியுறுத்தியும், அப்படிக் குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை எளிய மாதத் தவணைகளில் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்க கோரியும் வரும் 21-7-2020 (செவ்வாய்க்கிழமை) அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏற்றுவதோடு, கண்டன முழக்கங்களை எழுப்பிப் போராடுவது என்று மாவட்டச் செயலாளர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
கழக நிர்வாகிகள் இந்தப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் இந்தப் போராட்ட நோக்கத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tamilnadu eb bill issue dmk district secretaries meet m k stalin protest

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X