தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமை செயலகத்தில் 2025-ம் ஆண்டின் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை இன்று (ஜன.6) வெளியிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில், 2025ஆம் ஆண்டு சுருக்கமுறை திருத்தத்தின் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் படி தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர் உள்ளனர். அதில் 3 கோடியே 11 லட்சத்து 74,027 ஆண் வாக்காளர்கள், 3 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரத்து 803 பெண் வாக்காளர்கள் மற்றும் 9120 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும் தமிழ்நாட்டில் சோழிங்கநல்லூர் தொகுதி திக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகும். அங்கு 6 லட்சத்து 90 ஆயிரத்து 958 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த பட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 505 வாக்காளர்கள உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியலில் 3,740 வெளிநாடு வாழ் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர் எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இரண்டு அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியல் நகல்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்குமாறு அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி மாவட்ட தேர்தல் தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.