தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரி, சகோதரர்கள் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை 10 மணி நேரத்துக்குப் பிறகு நிறைவடைந்தது.
திருச்சி தில்லைநகர் 5-வது குறுக்குத் தெருவில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டுக்கு காலை 6.45 மணியளவில், 5 கார்களில் துணை ராணுவ பாதுகாப்புப் படையினருடன் வந்த 10-க்கும் அதிகமான அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். தற்போது, சட்டப்பேரவை நடைபெறுவதால் அமைச்சர் நேருவும், அவரது துணைவியாரும் சென்னையில் உள்ளனர்.
அதேபோல, அவரது மகனும், பெரம்பலூர் எம்.பி.யுமான அருண் நேருவும் டெல்லியில் உள்ளார். வீட்டில் சமையலர் மற்றும் உதவியாளர், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மட்டுமே இருந்தனர். இதையடுத்து, பாரதி நகரில் வசிக்கும் நேருவின் மகள் ஹேமா, அவரது கணவர் ஆனந்த் ஆகியோரை அமலாக்கத் துறையினர் அழைத்து வந்து சோதனையை தொடங்கினர். அப்போது, வீட்டில் இருந்தவர்களிடம் செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்ட அமலாக்கத் துறையினர், வீட்டிலிருந்து யாரும் வெளியேறக் கூடாது என தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையினர் வந்த காரிலிருந்து ‘பிரின்டர்’, சூட்கேஸ் ஆகியவற்றை அடுத்தடுத்து வீட்டுக்குள் எடுத்துச் சென்றனர். இதேபோல, 10-வது குறுக்குத் தெருவில் உள்ள அமைச்சர் நேருவின் சகோதரரான மறைந்த தொழிலதிபர் ராமஜெயத்தின் வீட்டிலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ராமஜெயத்தின் மனைவி லதா மட்டும் வீட்டில் இருந்தார். இரு இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. இந்த சோதனையின் இடையே வழக்கம் போல் வீட்டிற்கு தேவையான காய்கறி உள்ளிட்ட பொருட்களை பணியாளர்கள் வாங்கிச் சென்றனர். அமைச்சர் நேரு மற்றும் அவரது சகோதரர் வீட்டில் காலை தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை 10 மணி நேரம் நடந்தது. பின்னர், அதிகாரிகள் அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை எடுத்துக் கொண்டு காரில் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த சோதனையின் போது டெல்லியில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவரும் கேரளாவில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவரும் என ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் வந்திருந்தனர். திருச்சி வங்கி அதிகாரிகள் இருவரையும் சோதனைக்கு இடையே அவர்கள் அழைத்து விசாரணை செய்ததாக கூறப்படுகிறது. இந்த விசாரணையின் போது அமைச்சர் நேருவோ, அல்லது அவரது மகன் அருண் நேருவோ திருச்சியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்