கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் செயல்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்.கே.ஜி., யு.கே.ஜி ஆகிய மழலையர் வகுப்புகள் காரணமாக அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர்ந்தது. ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் படிப்பதற்கு இந்த மழலையர் வகுப்புகள் பெரிதும் உதவிகரமாக இருந்தன.
தற்போது தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அரசு நிறுத்தி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த கல்வி ஆண்டில் அரசு தொடக்கப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி ஆகிய மழலையர் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி அரசுப் பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் இன்று தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இதுவரை அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்கேஜி, யுகேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் இனி அந்தந்தப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் செயல்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இது குறித்து தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
இதுவரை பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வந்த மழலையர் வகுப்புகள் தற்போது சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. எனவே எல்கேஜி, யுகேஜி போன்ற மழலையர் வகுப்புகள் இனி அந்தந்தப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் செயல்படும்.
அருகில் எங்கே அங்கன்வாடி மையம் உள்ளதோ அங்கே குழந்தைகளை சேர்த்துக் கொள்ளலாம். எல்கேஜி, யுகேஜி ஆகிய மழலையர் வகுப்புகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் ஏற்கெனவே இருந்தபடி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கு மாற்றப்பட்டு, முழுமையாக ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil