Tamilnadu Local body Election : தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள கூட்டணி கட்சிகள் அனைத்தும் இரட்டை இலை சின்னத்திலல் போட்டியிட வேண்டும் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக தேர்தல் கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்டதை தொடர்ந்து வரும் பிப்ரவரி 19-ந் தேதி தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அடுத்து பிப்ரவரி 22-ந் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மேலும் இந்த தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்ட நிலையில், அரசில் கட்சியினர் அனைவரும் தீவிர தேர்தல் பணிகளில் களமிறங்கியுள்ளனர். இதில் சட்டமன்ற தேர்தலை சந்தித்த அதே கூட்டணியுடன் ஊராக உள்ளாட்சி தேர்தலை சந்தித்த ஆளும் கட்சியான திமுக பல இடங்களில் வெற்றிவாகை சூடியது.
அதே கூட்டணியுடன் தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும களமிறங்க உள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ள திமுக அதே வெற்றியை நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் அறுவடை செய்ய முழுவீச்சில் களமிறங்கி வருகிறது.
ஆனால் மறுபுறம் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்ற முடியாத வருத்தத்தில உள்ள அதிமுக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தங்களது வாக்கு சதவீதத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் அதிமுக பாஜக பாமக கூட்டணியில் சட்டமன்ற தேர்தலை சந்தித்து. ஆனால் அதன்பிறகு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தாங்கள் தனித்து போட்டியிடுவதாக பாமக கூட்டணியில் இருந்து விலகியது.
இந்நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் பாமக இதே நிலையில் நீடித்து வரும் நிலையில், தொகுதிப்பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில். இதற்கு காரணம் என்ன என்பது புரியாத புதிராக உள்ளது.
இந்நிலையில், தற்போது புதிய திருப்பமாக அதிமுக கூட்டணியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை சந்தக்கும் 5 கூட்டணி கட்சிகள் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்று அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கழக உறுப்பினர்கள் போட்டியிடும் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவி இடங்கள் தவிர மற்ற வார்டுகள் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம், சமூக சமத்துவப்படை, பாரதிய பார்வர்டு பிளாக ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தோழமை கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கழகத்தின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார்கள் . மேலும் தோழமை கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிடும் வகையில், கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புக்களும், தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil