Advertisment

ராகுல் அவர்களே வருக, புதிய இந்தியாவிற்கு விடியல் தருக’ : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

வெளிநாட்டு டூரில் இருக்கும் பிரதமர் மோடி, தேர்தல் வந்துள்ளதால் உள்நாட்டு டூர் வருகிறார். அவர் எங்கும் பத்தாண்டு சாதனைகளை பேசவில்லை.

author-image
WebDesk
New Update
Stalin Rahul
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை செட்டிப்பாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவின் எதிர்காலம், இந்தியாவின் நம்பிக்கை நாயகன் ராகுல் காந்தி. கோவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கணபதி ராஜ்குமார் கோவை மண்ணின் மைந்தர். கோவையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக பணியாற்றியவர். 17 ஆண்டுகள் கவுன்சிலராக பணியாற்றியவர். பத்திரிகைத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தும், கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வர இங்குள்ள மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். பொள்ளாச்சி வேட்பாளர் ஈஸ்வரசாமி கல்வி பணி, சமூக பணி மட்டுமின்றி பத்தாண்டுகளாக மக்கள் பணியும் செய்து வருகிறார். ஈஸ்வர சாமியை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப பொள்ளாச்சி மக்கள் வாக்குகள் அளிக்க வேண்டும். ஜோதிமணி அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க தயாரா? சாதாரண வெற்றி அல்ல, மாபெரும் வெற்றியை தர வேண்டும். நாடு சந்திக்கும் இரண்டாவது விடுதலை போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன், திமுக தோளோடு தோள் நிற்கும். சோதனை காலத்தில் காங்கிரஸ் உடன் இருக்கும் கட்சி திமுக, இந்த கூட்டணி வெல்லும் கூட்டணி. சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது தமிழ்நாடு மக்கள் தனிப்பட்ட அன்பு கொண்டவர்கள். ராகுல் அவர்களே வருக, புதிய இந்தியாவிற்கு விடியல் தருக. இந்தியாவின் தென்பகுதியான தமிழ்நாட்டில் இருந்து வரவேற்கிறேன்.

மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக் கொள் என்ற அண்ணாவின் வழியில், ராகுல் காந்தி நடை பயணத்தில் மக்கள் பிரச்சனை தெரிந்து தேர்தல் அறிக்கை உருவாக்கியுள்ளார். இந்த தேர்தலில் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தான். திமுக வலியுறுத்தி வரும் சமூக நீதி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எதிரொலித்துள்ளது. ஆண்டுக்கு ஒரு இலட்ச ரூபாய், நீட் விலக்கு, சாதிவாரி கணக்கெடுப்பு, இரண்டு மடங்கு கல்வி உதவி தொகை, புதிய ஜிஎஸ்டி சட்டம், வேளாண் இடுபொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு என மாநிலங்களுக்கும், நாட்டிற்கும் நம்பிக்கை அளிக்கும் வாக்குறுதிகளை ராகுல் காந்தி அளித்துள்ளார்.

வெளிநாட்டு டூரில் இருக்கும் பிரதமர் மோடி, தேர்தல் வந்துள்ளதால் உள்நாட்டு டூர் வருகிறார். அவர் எங்கும் பத்தாண்டு சாதனைகளை பேசவில்லை. இந்தியா கூட்டணியை குடும்ப கட்சி, ஊழல் கட்சி என வசைபாடிக் கொண்டிருக்கிறார். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். தேர்தலில் நின்று மக்கள் வாக்களித்தால் தான் பதவிக்கு வர முடியும். எங்களை மட்டுமல்ல எங்களை தேர்ந்தெடுத்த கோடிக்கணக்கான மக்களையும் அவர் அவமதிக்கிறார்.

பிரதமர் மோடி ஊழல் பற்றி பேச வெட்கப்பட வேண்டும். ஊழல் யூனிவர்சிட்டிக்கு வேந்தராக இருக்க பிரதமர் மோடி தகுதியானவர். இடி, ஐடி, சிபிஐ போன்ற கூட்டணி அமைப்புகளை வைத்து மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பணம் வாங்கியுள்ளார்கள். கார்பரேட் முதலாளிகளுக்காக பாஜக அரசு நடத்துகிறது. இது குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பிய போது பதில் சொல்லாமல் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தினார்கள். மோடி ஒரு வாசிங் மெசின் வைத்து ஊழல்வாதிகளை சுத்தப்படுத்துகிறார்கள். இது யோக்கியன் வருகிறான், சொம்பை எடுத்து உள்ளே வை என்ற பழமொழிக்கு ஏற்ப உள்ளது.

பத்தாண்டுகள் தமிழ்நாட்டை சீரழித்தவர் பழனிசாமி. நாம் இந்தியா கூட்டணி ஆள வேண்டும் என சொல்கிறோம். அவர் யார் ஆளணும், யார் ஆளக்கூடாது, யார் எதிரி என்பது தெரியாமல், கள்ளக்கூட்டணிக்கு ஆதாயம் தேடித்தர களத்திற்கு பழனிசாமி வந்துள்ளார். நம்பிய பலரின் முதுகில் குத்திய பழனிசாமி, பாஜகவை எதிர்த்து பேச முடியாது என்பதற்கு கூட்டணி தர்மம் காரணம் என்கிறார். அவர் சிம்பிலி வேஸ்ட். 3 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு எத்தனையோ சாதனைகளை செய்துள்ளது.

மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவது போல, மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் என்ற திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் தரப்போகிறோம். புதிய வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 1 கோடி பேர் பயன் அடைந்துள்ளார்கள். சொல்லாதையும் செய்வோம் என்பதை காட்டியுள்ளோம். கோவையில் உலகத்தரத்தில் பிரமாண்ட நூலகம் அமைக்க உள்ளோம். ஒவ்வொரு குடும்பமும் பயனடைய வேண்டுமென திட்டங்களை நிதி சுமைகளுக்கு இடையிலும் கொண்டு வருகிறோம். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் வியாபாரிகளுக்காக தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை, பொள்ளாச்சி ரயில் நிலைய புனரமைப்பு, மெட்ரோ திட்டம் திருப்பூர் வரை நீட்டிப்பு, சேரன் எக்ஸ்பிரஸ் பொள்ளாச்சி வரை நீட்டிப்பு, பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைப்பு, சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் நீக்கம், தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் அகற்றம் உள்ளிட்டவற்றை செய்து சொன்னதை செய்வோம் என மீண்டும் நிரூபிப்போம்.

தொழில் மிகுந்த கோவையை பத்தாண்டுகளாக பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்ற இரண்டு தாக்குதல் மூலம் பாஜக நாசம் செய்துள்ளது. பண மதிப்பிழப்பினால் பணப்புழக்கம் குறைந்து, பல தொழில்கள் முடிந்து போனது. ஜிஎஸ்டியினால் முதலாளிகளை கடனாளிகளாக்கியுள்ளது. 35 % மில்கள் மூடும் நிலையில் உள்ளது. திமுக கொங்கு பகுதியின் வளர்ச்சி திட்டங்களை தடுக்கிறது என பிரதமர் மோடி கூறியது வடிக்கட்டிய பொய். தமிழ்நாட்டில் 6500 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் துவங்க இருந்த நிறுவனத்தை  மிரட்டி குஜராத்திற்கு மாற்றினார்கள். இது தான் போலி பாசம். இப்போது கூச்சமே இல்லாமல் ஓட்டு கேட்டு வருகிறார்கள்.

அமைதியான இடத்தில் தான் தொழில் வளர்ச்சி இருக்கும். பாஜக என்ற கலவர கட்சியை உள்ளே விட்டால் அமைதி, தொழில் வளர்ச்சி போய்விடும். தமிழ்நாடு வளர்ச்சியை தடுப்பது யார் என மக்களுக்கு நன்றாக தெரியும். போலி முகமூடி மொத்தமாக கிழிந்து தொங்குகிறது. தமிழ்நாட்டை புறக்கணித்த மோடிக்கு, தமிழ்நாடு சொல்ல வேண்டியது வேண்டாம் மோடி. தெற்கில் இருந்து வரும் குரல் இந்தியா முழுக்க கேட்கட்டும். பாஜகவையும், அதன் பி டீம் அதிமுகவையும் தோற்கடிக்க வேண்டும். உங்களது வாக்குகள் இந்தியாவை, தமிழ்நாட்டை, எதிர்காலத்தை காக்கட்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதேஎனத் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment