கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் (நவம்பர் 16,17) தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்காக சிறப்பு முகாம்களில் இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களிடமிருந்து 4.42 லட்சம் பேர் உட்பட 6.85 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் தீவிரமாக தயராகி வரும் நிலையில், மறுபக்கம் தேர்தல் ஆணையம், வாக்காளர் தொடர்பான பணிகளில் களமிறங்கியுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த நவம்பர் 16 மற்றும் 17-ந் தேதி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடத்தப்பட்ட சிறப்பு முகாமகளில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக மொத்தம் 4,42,035 பேர் படிவம் 6ஐ சமர்ப்பித்துள்ளனர், அதே சமயம் வசிப்பிடம் மாறுதல், ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்துதல், இபிஐசியை மாற்றுதல் அல்லது குறியிடுதல் ஆகியவற்றுக்கு 1,98,931 பேர் படிவம் 8ஐ சமர்ப்பித்துள்ளனர் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியில் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பது அல்லது நீக்குவது குறித்த ஆட்சேபனைகளுக்கு 7, 44,128 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், 419 பேர் தங்கள் ஆதாரை EPIC உடன் இணைப்பதற்காக படிவம் 6B ஐ சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற முகாம்போன்று, அடுத்த வாரமும் (நவம்பர் 23 மற்றும் 24) மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 29 அன்று வெளியிடப்பட்ட புகைப்பட வாக்காளர் பட்டியல்கள் 2025 இன் சிறப்பு சுருக்க திருத்தத்தின் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல்களின்படி, மாநிலத்தில் மொத்தம் 6,27,30,588 வாக்காளர்கள் (ஆண்: 3,07,90,791; பெண்கள்: 3,19, 30,833; மூன்றாம் பாலினம்: 8,964). ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 11,40,042 அதிகம். கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“