தமிழகத்தில் 8 தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை முதல் 5 நாட்களுக்கு தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஒரே நாளில் 1.61 லட்சம் பேருக்கு கொரோனா
இந்தியாவில் ஒரே நாளில் 1,61,736 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 879 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,36,89,453 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 1,71,058 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா வருகிறது ரஷ்யாவின் 10 கோடி ஸ்புட்னிக்-வி-தடுப்பூசிகள்
அவசரகால பயன்பாட்டுக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசின் நிபுணர் குழு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, 10 கோடி தடுப்பூசிகள் ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
தமிழக – கேரள எல்லையில் இ.பாஸ் நடைமுறை அமல்
கொரோனா பரவல் அதிகரித்திருப்பதன் எதிரொலியாக, தமிழக – கேரள எல்லைப்பகுதியான குமுளி சோதனைச் சாவடியில் இ.பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.கேரளாவிலிருந்து வரும் வாகனங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இ.பாஸ் இல்லாதவர்கள் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இதேபோன்று தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களுக்கும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன
கோவை ஹோட்டல் தாக்குதல் விவகாரத்தில் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காரணம் காட்டி உணவகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நேற்று உதவி ஆய்வாளரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரனை நடத்தி இரண்டு வாரக்காலங்களில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என கோவை மாநகர ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
கொரோனா தொற்று பாதிப்பு உச்சம் தொட்டு வருவதால், மகாராஷ்டிர மாநிலத்தில், நாளை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் ஸ்கூட்டரில் எடுத்து செல்லப்பட்டதால், வேளச்சேரி தொகுதியில் வாக்குச்சாவடி எண் 92ல் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி வரும் 17ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அரக்கோணம் இரட்டை கொலை தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தலைமையிலான விசாரணை குழு விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கில், பாமகவிற்கு தொடர்பு இல்லை என அக்குழு தகவல் தெரிவித்துள்ளத..
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,984பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,47,129 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்திற்கு தேவையான மண்ணெண்ணெய் அளவில் 20% மட்டுமே மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நியாயவிலை கடைகளில் மண்ணெண்ணெய் வழங்கல் அளவு குறித்து குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வண்ணம் விளம்பரம் செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
‘கர்ணன்’ திரைப்படத்தில் வரலாற்றை தவறாக
சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகளை 2 தினங்களில்
மாற்றியமைக்கப்படும் என படக்குழு
தெரிவித்திருப்பதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் மறைந்த காங்ரஸ் வேட்பாளர் மாதவராவ் வெற்றி பெற்றால் இடைத் தேர்தலில் அவரது மகள் திவ்யாவிற்கு காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வைக் காண 24ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 2.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி அனுமதி வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், வரும் 15ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சுவாமி புறப்பாடு நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லை தென்காசி, குமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள ஈ.வே.ரா பெரியார் சாலையின் பெயர் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று பெயர் மாற்றப்பட்டதற்கு தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பெயர் பலகையில் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது.
அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் பாமகவிற்கு தொடர்பு இல்லை என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தலைமையிலான விசாரணை குழு தகவல் தெரிவித்துள்ளது.
பிரபல கால்பந்தாட்ட வீரர் செர்ஜியோ ரமோஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் பகுதியில் அமைந்திருக்கக் கூடிய வழிகாட்டு பதாகையில், ஈ.வெ.ரா பெரியார் சாலை என்றிருந்த பெயரை மாநகராட்சி நிர்வாகம் அழித்து விட்டு, கிராஸ்ட் வெஸ்டர்ன் ட்ரங் ரோடு என பெயர் மாற்றம் செய்த நிலையில், மீண்டும் அப்பெயரை நெடுஞ்சாலைத் துறையினர் மை கொண்டு அழித்துள்ளனர். சற்று நேரத்திற்கு முன்னர், தற்போது பெயரை மாற்றம் செய்து உத்தரவிடாவிட்டால், மே-2க்கு பிறகு உத்தரவிடப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட் செய்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்க, தானு தயாரிக்க, ஜீ.வி.பிரகாஷ் இசையில், சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் இசைப்பதிவு இன்று முதல் தொடங்குகிறது என ட்விட்டரில் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் தெரிவிக்க, ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ாடிவாசல் ட்ரெண்டாகி வருகிறது.
நாளை தொடங்க உள்ள புத்தாண்டிலிருந்து விவேகத்துடன் கொரோனா சூழலை கடக்க வேண்டுன் என, ஈஷா யோகா மையத்தின் தலைவர் ஜகி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ தேர்வுகள் மே மாதம் தொடங்கி நடைபெற உள்ள நிலையில், மாணவர்கள் ஆசிரியர்கள் என சுமார் 7 லட்சம் பேர் தேர்வுப் பணியில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், மாணவர்களின் ஆரோக்கியம் தான் நமக்கு முக்கியம் எனக் கூறி, மத்திய அரசுக்கு தேர்வுகளை ரத்து செய்ய கோரி கோரிக்கை விடுத்துள்ளார்.
அம்பேத்கரிய போராளி வீரா சதிதார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலமானார்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர், காவல்துறை வாகனம் மோதி உயிரிழந்தார். இதனை அடுத்து, சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்க கூடிய நிலையில், காவல்துறை சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், உயிரிழந்தவரின் உறவினர்களும் பொது மக்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்து இந்து அறநிலியத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், கோயில் மண்டபங்களில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை பெரியார் நெடுஞ்சாலை பெயர் மாற்ற சர்ச்சையில், பெரியார் சாலையை கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் சாலை என பெயர் மாற்றம் செய்ய, காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மீண்டும் பெயரை பெரியார் சாலை என மாற்றி உத்தரவிடாவிட்டால், மே-2க்கு பிறகு உத்தரவு வெளியாகும் என சூசகமாக தெரிவித்துள்ளார்.
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான ராஜ்குமார், தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டி, டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையம் முன்பு போராட்டம் நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கேரளாவில் இருந்து தமிழகம் வருவோர்க்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து எல்லைப் பகுதியில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்..
இந்தியாவின் 24-வது தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
கேரள உயர்க்கல்வித்துறை அமைச்சர் ஜலீல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக லோக் ஆயுக்தா தெரிவித்திருந்த நிலையில், அவர் தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என்ற பதிவுத்துறையின் கோரிக்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தின்போது முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.
வெளிநாடுகளில் அவசரகால பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று, அவசர கால பயன்பாட்டுக்கு இந்த தடுப்பூசிகள் உபயோகப்படுத்தப்படும். தடுப்பூசி செலுத்தப்படும் முதல் 100 பேரை, 7 நாட்களுக்கு கண்காணித்து பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் உள்ள காந்தி சிலை பகுதியில் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
8 பேரையாவது சுட்டுக்கொன்றிருக்க வேண்டும் என பேசிய மேற்கு வங்கம் பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹாவிற்கு, 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது.
சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியிருக்கிறார்.
மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய தடை விதித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சிகள், வேட்பாளர்களுக்கு சமமான வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்றும் ஒருசார்பின்மை, நடுநிலை கடைபிடிக்கப்படுவதையும் உறுதி செய்திட வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
The faith in our democracy rests on free and fair elections. The Election Commission of India must ensure a level playing field for all parties and candidates and ensure that impartiality and neutrality is maintained.#mamatabanerjee
— M.K.Stalin (@mkstalin) April 13, 2021
மகாராஷ்டிரா, டெல்லி, சத்தீஸ்கர், தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் தினசரி 80.8% கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் யுகாதியும், நாளை தமிழ் புத்தாண்டும் கொண்டாடப்படுவதால் இரண்டு நாட்களுக்குசென்னை மெட்ரோ ரயில் சேவையில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது மனைவி, மகன், மருமகள் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அனைவரும் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் தேர்தல் பிரசாரம் செய்த நிலையில், செந்திலுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40.4 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.