Advertisment

News Highlights: 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் துரிதமாக தடுப்பூசி- சுகாதாரத் துறை

tamilnadu news update: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
News Highlights: 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் துரிதமாக தடுப்பூசி- சுகாதாரத் துறை

Tamil News Live

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க உறுதி -மோடி

கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள மாநில அரசுகள் போராடி வரும் சூழலில் பல்வேறு மாநில ஆளுநர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, தடுப்பூசிகளைத் தேவையான அளவுக்கு மத்திய அரசு வழங்கும் என உறுதியளித்துள்ளார். தடுப்பூசி தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும். கொரோனாவுக்கு எதிரான போரில் ஆளுநர்கள் முக்கியத் தூண்களாக இருக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம் என பேசியுள்ளார்.

2 லட்சத்தை தாண்டிய ஒருநாள் பாதிப்பு

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,40,74,564 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,24,29,564 ஆக உயர்ந்துள்ளது.

அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக தமிழகத்தில் 61 நாட்கள் அடங்கிய மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதனால் வருகிற ஜூன் 14ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இந்த தடை அமலில் இருக்கும். இந்த நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படுவதால் மீன்களின் விலை வரும் நாட்களில் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.

காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம்

கொரோனா வைரஸ் தொற்று குறித்து விவாதிக்க காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் வரும் 17ஆம் தேதி கூடுகிறது. குறிப்பாக காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் மாநிலங்களில் தான் கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. மேலும் மருத்துவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி இருக்கிறார்.

ரெம்டெசிவர் மருந்து உற்பத்தியை அதிகரிக்க முடிவு

ரெம்டெசிவர் மருந்து உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்கவும், விலையை குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது மாதத்திற்கு ரூ.39 லட்சம் குப்பிகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், கூடுதலாக 10 லட்சம் குப்பிகள் உற்பத்தி செய்ய கூடுதலாக 6 நிறுவனங்களுக்கு அனுமதியளித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:15 (IST) 15 Apr 2021
    கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை மறு அடக்கம் செய்ய தடை

    சென்னையை சேர்ந்த பிரபல நரம்பியல் டாக்டர் சைமன் ஹெர்குலிஸ், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மரணமடைந்த நிலையில், அவரது உடலை, கிறிஸ்தவ மத சடங்குகளை நடத்தி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மறு அடக்கம் செய்ய அனுமதிக்கும்படி அவரது மனைவி ஆனந்தி சைமன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மறு அடக்கம் செய்ய வேண்டும் என்று கடந்த மார்ச் 31-ந் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி ஆணையர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கொரோனாவால் இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்வது சாத்தியமல்ல என என கூறி அந்த உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது.


  • 22:06 (IST) 15 Apr 2021
    அதிகரிக்கும் கொரோனா தொற்று : நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட உத்தரவு

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை அடுத்த உத்தரவு வரும் வரை உடனடியாக மூட மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.


  • 19:54 (IST) 15 Apr 2021
    முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், மருத்துவ மாணவர்களின் நலன் கருதி ஏப்ரல் 18ல் நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் குறிப்பிட்டுள்ளார். மேலும் முதுநிலை நீட் தேர்விற்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.


  • 18:48 (IST) 15 Apr 2021
    தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமான சென்னையில் ஒரேநாளில் 2,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று பாதிப்புக்கு 8 பேர் பலியாகியுள்ளனர்.


  • 17:38 (IST) 15 Apr 2021
    விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 4 பேர் படுகாயம்

    விருதுநகர் அருகே சதானந்தபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். பட்டாசு ஆலை உரிமையாளர் ராஜா தலைமறைவான நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


  • 17:33 (IST) 15 Apr 2021
    45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி; மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவு

    45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசி இலக்கை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.


  • 17:07 (IST) 15 Apr 2021
    மாயமான 9 மீனவர்களை மீட்கக் கோரி மத்திய அரசுக்கு கனிமொழி கடிதம்

    மங்களூரு அருகே சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதியதில் மாயமான 9 மீனவர்களை விரைந்து மீட்கக் கோரி மத்திய உள்துறை பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கு திமுக எம்.பி கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.


  • 16:18 (IST) 15 Apr 2021
    12 ஆம் வகுப்பு தேர்வுகள் குறித்து தமிழக அரசு ஆலோசனை

    சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் பிளஸ்-2 தேர்வுகள் குறித்து தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர். ஆலோசனைக்கு பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.


  • 15:55 (IST) 15 Apr 2021
    சிவகாசி முதலிப்பட்டியில் பட்டாசு ஆலை விபத்து

    சிவகாசி அருகே முதலிப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் உராய்வின் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் காயமைடந்துள்ளனர்.


  • 15:38 (IST) 15 Apr 2021
    உயிர்காக்கும் தடுப்பூசி போடுவதை திருவிழா என பெயர் சூட்டுவது கண்டிக்கத்தக்கது - ஸ்டாலின்

    தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு தாமதமின்றி அனுப்பிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், உயிர்காக்கும் தடுப்பூசி போடுவதை திருவிழா என பெயர் சூட்டுவது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.


  • 15:23 (IST) 15 Apr 2021
    10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு - உத்திரபிரதேச அரசு அறிவிப்பு

    உத்திரபிரதேச மாநிலத்தில் மே 15 வரை பள்ளிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாகவும் அறிவித்துள்ளது.


  • 14:48 (IST) 15 Apr 2021
    கேரளாவில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை

    கேரள மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம், திருவனந்தபுரம் உட்பட 5 மாவட்டங்களில் கோவிஷீல்ட் மருந்து காலியாகி விட்டது. இதனால் முகாம்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. முதல் டோஸ் செலுத்தியவர்களுக்கு 2ஆவது டோஸ் செலுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.


  • 14:37 (IST) 15 Apr 2021
    கொரோனா அதிகரிக்கும் நிலையில் நீட் தேர்வு தேவையா? ஸ்டாலின் கேள்வி

    கொரோனா பாதிப்பும் மரணமும் அதிகரிக்கும் இந்த நேரத்தில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தேவைதானா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவர்கள் கடினமாக போராடி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.


  • 13:50 (IST) 15 Apr 2021
    அந்நியன் படத்தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஷங்கருக்கு நோட்டீஸ்

    அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உரிய அனுமதி பெறவில்லை என தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், அந்நியன் திரைப்படத்தின் முழு உரிமையும் தன்னிடம்தான் உள்ளது என்றும் தன்னுடைய அனுமதி இல்லாமல் அந்நியன் திரைப்படத்தை ரீமேக் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.


  • 13:43 (IST) 15 Apr 2021
    டெல்லியில் வார இறுதி நாட்களில் முழுஊரடங்கு

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் வார இறுதி (சனி, ஞாயிறு) நாட்களில் முழு ஊரடங்கு இருக்குமென முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தியேட்டர்கள் மற்றும் மால்கள் வார இறுதியில் மூடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.


  • 12:48 (IST) 15 Apr 2021
    மருத்துவர் சைமன் உடலை மறுஅடக்கம் செய்ய தடை

    கொரோனாவால் இறந்த மருத்துவர் சைமன் உடலை மறுஅடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. கொரோனா 2-ஆவது அலை அதிகரித்துள்ள சூழலில் மறுஅடக்கம் தேவையா என ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறது.


  • 11:58 (IST) 15 Apr 2021
    1.28 கோடி தடுப்பூசிகள்

    இந்தியா முழுவதும் கடந்த 4 நாட்கள் நடைபெற்ற தடுப்பூசி திருவிழாவில் 1.28 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது


  • 11:47 (IST) 15 Apr 2021
    அரியர் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு

    அரியர் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி அடைய முடியாது எனவும் அரியர் மாணவர்களுக்கு மே 17ஆம் தேதி முதல் தேர்வு நடத்தப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


  • 11:06 (IST) 15 Apr 2021
    நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

    சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரியில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் கொரோனா வரும் ஆனால் உயிரிழப்புகள் ஏற்படாது. அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என விவேக் கேட்டுக்கொண்டார்.


  • 10:54 (IST) 15 Apr 2021
    7 மாவட்டங்களில் கனமழை

    வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடனும், மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலான காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


  • 10:50 (IST) 15 Apr 2021
    கொரோனா பரவல்- நாளை ஆலோசனை

    தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடு தேவையா என்பது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.


Tamil News Live Update Tamilnadu Latest News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment