scorecardresearch

Tamil News Today Live : அதிகரிக்கும் கொரோனா… அரசு விழித்துக்கொள்ள வேண்டும் -சோனியா காந்தி

5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Tamil News Today Live : அதிகரிக்கும் கொரோனா… அரசு விழித்துக்கொள்ள வேண்டும் -சோனியா காந்தி

Today Tamil News : தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

நாளை வாக்கு எண்ணிக்கை :

தமிழகம், புதுவை, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

இன்று முதல் 18+ அனைவருக்கு தடுப்பூசி :

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக மாநில அரசுகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், 15 மாநிலங்களில் மத்திய அரசின் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது.

100-ஐ கடந்த கொரோனா பலி :

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் உச்சமடைந்து வரையும் வரையில், நேற்று ஒரு நாளில் மட்டும் 18,692 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் சிகிச்சையில் இருந்த 113 பேர் உயிரிழந்துள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையில் சிக்கல் :

விருதுநகர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள், ஊழியர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்கள் என 2,527 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
20:54 (IST) 1 May 2021
அரசு விழித்துக்கொள்ள வேண்டும் – சோனியா காந்தி

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு விழித்துக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி கூறியுள்ளார்

19:48 (IST) 1 May 2021
தொண்டர்களுக்கு ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிக்கை

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தேர்தல் வெற்றியை அமைதியான முறையில் வெற்றியை கொண்டாடுங்கள்’ என்று அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

19:01 (IST) 1 May 2021
தமிழகத்தில் இன்று ஒரே நாளில், 19,588 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில், 19,588 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 11,86,344 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில், தமிழகத்தில் 147 கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

18:16 (IST) 1 May 2021
டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீடிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

18:12 (IST) 1 May 2021
புதுக்கோட்டையில் 54 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று

தமிழகம் முழுவதும் நாளை வாக்கு எண்ணும் பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.இதில் புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபடவிருந்த 54 அதிகாரிகள், முகவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு்ளளது.

18:10 (IST) 1 May 2021
தொண்டர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை

தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், தனது கட்சி வேட்பாளர்களுடன் நேர்காணலில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், வெற்றி எனில் கொண்டாடத்தேவையில்லை. தோல்வி எனில் துவளத்தேவையில்லை என்று கூறியுள்ளார்.

17:35 (IST) 1 May 2021
புதுக்கோட்டையில் வாக்கு எண்ணிகையில் ஈடுபட உள்ள 54 அதிகாரிகள், முகவர்களுக்கு கொரோனா

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. இந்நிலையில் புதுக்கோட்டையில் நாளை வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபடவிருந்த அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

16:36 (IST) 1 May 2021
டெல்லிக்கு உடனடியாக 490 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லிக்கு உடனடியாக 490 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது எனவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பொது உயிரிழப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளது.

16:21 (IST) 1 May 2021
இந்தியாவை வந்தடைந்தது ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து

கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்து ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்தடைந்துள்ளது. முதற்கட்டமாக 1.50 லட்சம் தடுப்பு மருந்துகள் ஐதராபாத்க்கு வந்தடைந்தன. ரஷ்யாவில் இருந்து இந்த தடுப்பு மருந்துகளை டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் இறக்குமதி செய்துள்ளது.

16:12 (IST) 1 May 2021
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய கேப்டன் கேன் வில்லியம்சன்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமனமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கேப்டன் பொறுப்பிலிருந்த வார்னருக்கு பதிலாக வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். வார்னர் தலைமையில் இந்த ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணி பெரிதாக சோபிக்காத நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

16:07 (IST) 1 May 2021
வாக்கு எண்ணும் மையங்களில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும்

இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும் எனவும், இடைப்பட்ட நேரத்தில் வாக்கும் எண்ணும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்

16:04 (IST) 1 May 2021
கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று காரணமாக தேர்தல் அலுவலர்கள் 6 பேர் மாற்றப்பட்டுள்ளனர் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

16:02 (IST) 1 May 2021
ஆக்சிஜன் பற்றாக்குறை- 8 பேர் உயிரிழப்பு

டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

15:05 (IST) 1 May 2021
பாலிவுட் நடிகர் பிக்ரம்ஜீத் கன்வார்பால் மரணம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகர் பிக்ரம்ஜீத் கன்வார்பால் உயிரிழந்தார். பல பிரபலமான இந்தி படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இணையதள தொடர்களில் நடித்துள்ளார்.

14:46 (IST) 1 May 2021
ஊழல் புகார் -உயர்நீதிமன்றம் அதிருப்தி

ஊழல் புகாரில் சிக்கும் அரசு அதிகாரிகளுக்கு அனைத்து பண பலன்களும் கிடைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

13:49 (IST) 1 May 2021
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி – துவங்கி வைத்தார் எடியூரப்பா

கர்நாடகாவில் வழங்கும் நிகழ்ச்சியை அம்மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா துவங்கி வைத்தார். பவ்ரிங் மற்றும் லேடி கர்ஸூன் மருத்துவமன்னையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

13:01 (IST) 1 May 2021
5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர் ஆலோசனை

5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள சூழ்நிலையில் முக்கிய ஆலோசனையாக இது பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிகிறார்

12:48 (IST) 1 May 2021
தமிழகத்திற்கு 7.33 லட்சம் தடுப்பூசி ஒதுக்கீடு

வருகின்ற இரண்டு வாரங்களில் தமிழகத்திற்கு 7.33 லட்சம் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

12:24 (IST) 1 May 2021
ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2 நாட்கள் விடுமுறையையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அதிகபட்சமாக சென்னையில் ரூ.63.44 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

12:22 (IST) 1 May 2021
உரிமம் இல்லாமல் செயல்படும் செங்கல்சூளைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோவை மாவட்டம் தடாகத்தில் யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள உரிமம் இல்லாமல் செயல்படும் செங்கல்சூளைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

12:19 (IST) 1 May 2021
என் பெற்றோர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டன்ர் – நீங்களும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளுங்கள்

கொரோனாவிற்கு தடுப்பூசி போடுவதை நினைத்து அச்சம் அடைய வேண்டாம். அது மிகவும் பாதுகாப்பானது. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெறுங்கள் என்று நடிகர் சித்தார்த் ட்வீட்.

11:26 (IST) 1 May 2021
நெல்லையில் 135 முகவர்களுக்கு கொரோனா உறுதி!

நெல்லை மாவட்டதில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ள முகவர்கள் 135 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

11:24 (IST) 1 May 2021
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 45 பேருக்கு கொரோனா உறுதி!

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி, அலுவலக ஊழியர்கள் என 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

10:28 (IST) 1 May 2021
தொழிலாளப் பெருமக்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்துகள்; தமிழக முதல்வர்!

தளர்வறியா உழைப்பினால் இந்திய அளவில் தமிழகத்தை எப்போதும் முதன்மை மாநிலமாக நிலைநிறுத்தி வரும் தொழிலாளப் பெருமக்களுக்கு உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

10:16 (IST) 1 May 2021
கொரோனா உறுதி; தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றம்!

கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக காமராஜர் என்பவரை தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட ஆட்சியர் நியமித்துள்ளார்.

10:12 (IST) 1 May 2021
307 மில்லிய டன் உணவு தானியங்களுக்கு இலக்கு!

நடப்பு நிதியாண்டில் 307 மில்லியன் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்ய மத்திய அரசு நிர்ணயித்துள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.

09:30 (IST) 1 May 2021
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாஸ்க்!

பொள்ளாச்சியில் டீக்கடை உரிமையாளர் ஒருவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாஸ்க் அணிவித்து, மாஸ்க் அணிவதன் அவசியத்தை உணர்த்தியுள்ளார்.

09:28 (IST) 1 May 2021
இந்தியாவில் 4 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!

நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 4 லட்சத்து ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3523 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாள் மட்டும் 2 லட்சத்து 99 ஆயிரத்து 988 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்

08:59 (IST) 1 May 2021
முன்களப் பணியாளர்களின் காப்பீட்டு திட்டம் நீட்டிப்பு

முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டு திட்டம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

08:57 (IST) 1 May 2021
தடுப்பூசி தட்டுப்பாடு; 18+ தடுப்பூசி திட்டத்தில் சறுக்கல்!

இன்று முதல் 18+ அனைவருக்கும் தடுப்பூசி என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தடுப்பூசி தட்டுப்பாட்டின் காரணமாக 15 மாநிலங்களில் தடுப்பூசி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

08:54 (IST) 1 May 2021
மருத்துவமனையில் தீ விபத்து; 16 கொரோனா நோயாளிகள் பலி!

குஜராத் மாநிலத்தின் பாரிச்சூர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். தீ விபத்து காரணமாக சிகிச்சையில் இருந்த மற்ற கொரோனா நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Web Title: Tamilnadu election news live results corona dmk stalin cm eps victory chennai live updates

Best of Express