எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை நிராகரித்த ஓபிஎஸ்: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வத்தின் இல்லத்துக்கு சென்று சால்வை மற்றும் பூச்செண்டு கொடுத்து வாழ்த்தி உள்ளார். பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Edappadi Palanisamy Meets ADMK Chief OPS Tamil News : தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ள அதிமுக வின் சார்பில், எதிர்க்கட்சித் தலைவராக யார் பொறுப்பேற்க உள்ளார் என்ற விவாதம் தொடங்கியது. அதிமுக வில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவாதத்திற்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை முன் நிறுத்தினோம். அவரால், தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அதனால், கட்சித் தலைமைப் பொறுப்பில் யார் உள்ளார்களோ, அவரே எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என, பன்னீர் செல்வம் தரப்பினரும், எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர பிரசாரங்களால் தான், அதிமுக இந்த அளவிற்கு வெற்றிப் பெற்றுள்ளது என பழனிச்சாமி தரப்பினரும், எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்காக தங்கள் பக்கத்தின் பலங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

iஎதிர்க்கட்சித் தலைவர் தேர்வு குறித்து விவாதிப்பதற்காக, அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் அதிமுக தலைமையகத்தில் கூடி இருந்தனர். எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் தேர்வு குறித்து காரசார விவாதங்கள் நடைபெற்றன. பல மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் முடிவுகள் ஏதும் எட்டப்படாததால், திங்கள் கிழமைக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பின், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற இரு தலைவர்களுக்கும் ஆதரவாக மாறி மாறி கோஷங்கள் எழுப்பப்பட்டதால், அந்த இடமே பதற்றம் நிறைந்ததாக காணப்பட்டது.

திங்கள் கிழமையான நேற்று, மீண்டும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் விராலிமலை எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர், வைத்திலிங்கம், இசக்கி சுப்பையா ஆகிய மூவரும் கலந்துக் கொள்ளவில்லை. மீதமுள்ள் அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். வெள்ளிக் கிழமை நடைபெற்ற காட்சிகளை மிஞ்சும் வகையில், மீண்டும் அதே கோஷங்கள் தான் கூட்ட அரங்கிற்கு உள்ளும் வெளியிலும் எழுப்பப்பட்டதாக தெரிய வருகிறது.

கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக மோதிக் கொள்ளும் ஓபிஎஸ் மற்றும் பழனிச்சாமி இருவரும் தங்கள் தரப்பு நியாயங்களை கூறி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தங்களுக்கு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், இருவருக்கும் பொதுவாக கட்சியில் சீனியர் மற்றும் முன்னாள் சபாநாயகரான தனபாலை, எதிர்க்கட்சித் தலைவராக, ஓபிஎஸ் முன் மொழிந்துள்ளார். இதற்கு, பழனிச்சாமி தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனபாலும், எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதை போல் நீங்களே பேசி முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என ஒதுங்கிக் கொண்டாராம்.

பெருவாரியான எம்.எல்.ஏக்களின் பலத்தை ஏற்கனவே பெற்று வைத்திருந்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, பன்னீர் செல்வத்தை சமாதானப்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் குறித்தான கோப்புகளில் கையெழுத்து வாங்குவதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். ஒரு வழியாக, எடப்பாடியை எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கும் கட்சிக் கோப்புகளில் தனது கையெழுத்து போட்டு விட்டு, விரக்தியுடன் கூட்ட அரங்கை விட்டு வெளியேறி உள்ளார், பன்னீர் செல்வம். கூட்டத்தில், எதிர்க்கட்சித் துணை தலைவராக பன்னீர்செல்வம் முன் மொழியப்பட்டாலும், தனக்கு அந்த பதவி வேண்டாம் என கூறி, முன்னாள் சபாநாயகர் தனபாலை முன்மொழிந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில், புதிய எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதை அடுத்து, அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு மற்றும் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு உள்பட முக்கிய ஆவணங்களை, ஓபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் சமர்பித்துள்ளார். இதனை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வத்தின் இல்லத்துக்கு சென்று சால்வை மற்றும் பூச்செண்டு கொடுத்து வாழ்த்தி உள்ளார். பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதனிடையே, எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஆலங்குளம் எம்.எல்.ஏ.மனோஜ் பாண்டியனை தவிர்த்து, அனைத்து எம்.எல்.ஏக்களும் எடப்பாடியின் பக்கம் நிற்பதாக் அதிமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu election opposition leader admk mla meeting ops eps meets

Next Story
எம்.பி பதவி ராஜினாமா; பலம் வாய்ந்த எதிர்கட்சி எம்.எல்.ஏக்களாக வைத்திலிங்கம், முனுசாமி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com