தமிழ்நாடு முதலமைச்சர் அதானியைச் சந்திக்கவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாகச் சூரிய ஒளிமின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தொழிலதிபர் அதானியை தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்தது போலவும், அதிக விலைகொடுத்து அதானியிடமிருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டிருப்பது போலவும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கற்பனையான தகவலைக் கட்டுக்கதைகள் போல் வெளியிட்டு தெரிவித்து வருவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் அதானியைச் சந்திக்கவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாகச் சூரிய ஒளிமின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அ.தி.மு.க. ஆட்சியில் நிர்வாக ரீதியாகவும், நிதிநிலைமை ரீதியாகவும் முற்றிலும் சீர்குலைந்திருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை அடுத்தடுத்த நிர்வாகச் சீர்திருத்த மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கை மூலம், இன்றைக்குத் தமிழ்நாடு மின்சார வாரியத்தைத் தலைநிமிர வைத்துள்ளவர் முதலமைச்சர். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படி அடிப்படை உண்மை கிஞ்சித்தும் இல்லாத பொய்க் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பி வருவது அரசியல் பண்பாடு அல்ல.
“ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் நுகர்கின்ற மொத்த மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு புதுப்பிக்கத்தக்க மின் சக்தியைப் பயன்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், அபராதம் செலுத்த வேண்டும்” என்ற ஒன்றிய அரசின் கட்டாய விதியின் அடிப்படையில் 2020, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் 2000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் ஒன்றிய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI)வுடன் ஒப்பந்தம் செய்துள்ளதே தவிர, எந்தவொரு தனியார் நிறுவனத்துடனும் அல்ல.
இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்த மின்சார வாரியங்களைப் போல தமிழ்நாடு மின்சார வாரியமும் ஒன்றிய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) நிறுவனத்துடன் மட்டுமே மின்சாரம் கொள்முதல் செய்து வருகின்றது. குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்தப் பிறகு, எந்த தனியார் நிறுவனங்களுடனும் மின்சார வாரியம் நேரடியாக எவ்விதமான ஒப்பந்தமும் செய்து கொள்வதில்லை. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும், மாநிலத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும், ஒன்றிய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ள மரபுசாரா கொள்முதல் (RPO) இலக்குகளை அடைவதற்கும் மாண்பமை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெற்று செய்யப்பட்ட ஒப்பந்தங்களாகும். இதில், எவ்வித முறைகேடும், விதிமுறை மீறல்களும் இல்லை.
அதானி நிறுவனத்திடம் இருந்து ஒரு யூனிட் சூரிய ஒளி மின்சாரத்தை ரூ.7.01க்கு நீண்ட கால அடிப்படையில் பெற 2014ல் ஒப்பந்தமிட்ட அரசை விட்டுவிட்டு, 2021ம் ஆண்டு பொறுப்பேற்ற உடனே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் அதானி நிறுவனத்துக்கு எதிரான வழக்கை திறம்பட நடத்திய திராவிட முன்னேற்றக் கழக அரசை மின்சார வாரியத்திற்கு சாதகமாக, அதாவது ரூ.5.10க்கு ஒரு யூனிட் மின்சாரம் என்னும் அளவிற்கு சாதகமான ஆணையைப் பெற்ற அரசை குறை சொல்வது எந்த வகையிலும் நியாயமாகாது. அதனால்தான் அறிக்கைகள் விட ஆர்வம் இருக்கலாம். ஆனால் அதற்கு அடிப்படை புரிதலும் அறிவும் இருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மின்கட்டண உயர்வு மூலம் 31,500 கோடி ரூபாய் என்று ஒரு அபத்தமான குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்கள். எப்போது மின் கட்டண உயர்வை ஏற்படுத்தினாலும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுவது திராவிட முன்னேற்றக் கழக அரசு மட்டுமே. இலட்சக்கணக்கான ஏழை எளிய மக்களின் வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டு மின் மானியமாக வழங்க ஆணை வெளியிட்டு, வீடுகளுக்கான மின்கட்டண உயர்வே இல்லாமல் பார்த்துக்கொண்டவர் எங்கள் முதலமைச்சர் மட்டுமே என்பதை இந்தநேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
ஆகவே உண்மை இவ்வாறு இருக்க, 2021-ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் கட்டாயத்தின் அடிப்படையில், ஒன்றிய அரசு நிறுவனமான சூரிய மின்சக்தி கழகத்திடமிருந்து இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைப் போலவே சூரிய ஒளி மின்சாரத்தைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு மின்சார வாரியமும் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அது சம்பந்தமாக 2024-ஆம் ஆண்டு நிறுவனத்தின் பிரதிநிதியை முதலமைச்சர் சந்தித்ததாகக் கூறுவது முற்றிலும் தவறானது மட்டுமல்லாது, மக்களிடம் வேண்டுமென்றே பொய்யான தகவல்களைக் கொண்டுச் சென்று தமிழ்நாட்டு மக்களைத் திசைதிருப்பும் முயற்சியாகவே கருத வேண்டி உள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டதையும் மறைத்து உச்சநீதிமன்ற உத்தரவையும் அறியாதவர்கள் போல் அ.தி.மு.க அரசின் மின் கொள்முதலை தி.மு.க அரசின் மின் கொள்முதல் முடிவு போல் சித்தரிக்க துடிக்கும் அரைகுறை அரசியல்வாதிகளுக்கு அதானி நிறுவனத்தையோ- அ.தி.மு.க.,வையோ விமர்சிக்க துணிச்சல் இல்லாமல் தவிக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. அதற்குள்தான் அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி திரைமறைவில் ஒளிந்து கிடக்கிறது.
முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் அரசில், மின்வாரியம் நிர்வாக ரீதியாகவும், நிதிச் சுமையிலிருந்தும் சீரடைந்து, ஏழை எளிய நுகர்வோரின் நலனைப் பிரதானமாக எண்ணி நல்லாட்சிக்கு இலக்கணமாகச் செயல்பட்டு வருவதை பொறுத்துக்கொள்ள இயலாமல், “அவரைச் சந்தித்தார்” “இந்தத் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார்” என்றெல்லாம் பொய்த் தகவல்களைத் தொடர்ந்து பரப்புவார்களேயானால், அவர்கள் மீது கடும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.