பொறியியல் மாணவர் சேர்க்கை : ‘டி.டி.’யாக பணம் செலுத்த அண்ணா பல்கலை அனுமதி

பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பத்திற்கான கட்டணத்தை டிடி (டிமாண்ட் டிராஃப்ட்)யாக செலுத்தலாம் என்று உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ‘டிமாண்ட் டிராஃப்ட்’ மூலமாக விண்ணப்பிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் கவுன்சலிங் மூலமாக மேற்கொள்கிறது. முதல் முறையாக இந்த ஆண்டு கவுன்சலிங்கை ஆன் – லைனில் நடத்துகிறது. எனவே கவுன்சலிங்கிற்கான பதிவையும் ஆன் – லைனில் மேற்கொள்ள அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. அதன்படி மே 30-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.

பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் தங்களின் இ மெயில் ஐ.டி உள்ளிட்ட விவரங்களுடன் பதிவு செய்து வருகிறார்கள். பதிவுக் கட்டணத்தை டெபிட் கார்டு மூலமாக ஆன் – லைனில் செலுத்தி வருகின்றனர். வங்கிக் கணக்குகள் இல்லாத குடும்பத்தினருக்கு இந்தக் கட்டணத்தை செலுத்துவதில் சிரமம் இருந்தது.

இதற்கிடையே பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன், வக்கீல் பொன்.பாண்டியன் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கிற்கு பதில் அளித்த அண்ணா பல்கலைக்கழகம், ‘ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும் என்று கடந்த ஆண்டே அறிவித்து விட்டோம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, கலந்தாய்வில் பங்கேற்பதால் எந்த பாதிப்பும் இல்லை. விண்ணப்பத்தை எளிதாக விண்ணப்பிக்கலாம்’ என்று கூறியிருந்தது.

இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள் வி.பார்த்திபன், ஆதிகேசவலு ஆகியோர், ‘ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து, கலந்தாய்வில் கலந்துகொள்ளும் இந்த புதிய முறையினால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதனால் மாற்று நடவடிக்கையாக விண்ணப்பத்தொகையை நேரடியாகவோ அல்லது கேட்பு காசோலையாகவோ செலுத்த அனுமதிக்கலாமா? என்பது குறித்தும், விண்ணப்பத்தை தமிழில் நிரப்ப அனுமதி வழங்குவது குறித்தும் அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலித்து இறுதி முடிவை தெரிவிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தனர்.

அப்போது, ‘தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்களில் தலா 30 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கிராமப்புற மாணவர்களுக்கு உதவி செய்கின்றனர். விண்ணப்ப கட்டணத்தை ‘கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங்’ மூலமாக மட்டுமே செலுத்த முடியும். கேட்பு காசோலை மூலம் பணம் பெறுவதை தொழில்நுட்ப சிக்கல் உள்ளது’ என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்பட்டது.

இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மாணவர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதால்தான் மாற்று கருத்துகளை நாங்கள் தெரிவித்தோம் என்று நீதிபதிகள் கூறினர். பின்னர், ‘விண்ணப்பதாரர்களிடம் இருந்து கட்டணத்தை ரொக்கமாக ஏன் பெறக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) அண்ணா பல்கலைக்கழகம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பத்திற்கான கட்டணத்தை டிடி (டிமாண்ட் டிராஃப்ட்)யாக செலுத்தலாம் என்று உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டிடியில் கட்டப்படும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், வரும் 18 ஆம் தேதிக்குள் வரைவோலையை ஏற்றுக்கொள்ளும் வகையில் மென்பொருள் மாற்றியமைக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

 

 

×Close
×Close