ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஈவெரா திருமகன் சமீபத்தில் மரணமடைந்தார். இதனால் காலியாக உள்ள அந்த தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2-ந் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் மீண்டும் வெற்றிபெற திமுக காங்கிரஸ் கூட்டணியும், இழந்த வெற்றியை மீண்டும் அடைய அதிமுக கூட்டணியும் தீவிரமாக களமிறங்க உள்ளன. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்நது, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனிடையே இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் த.மா.க போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இது தொடர்பாக த.மா.க ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள், ஜெயக்குமார், வளர்மதி, பெஞ்சமின், கோகுல இந்திரா உள்ளிட்ட சிலர் இன்று த.மா.க தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து பேசிய ஜி.கே.வாசன்,
கடந்த முறை நாங்கள் போட்டியிட்டோம். இந்த முறைய அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். உங்களது இலக்கு வெற்றிதான். வெற்றி வியூகத்தை வகுப்பதற்காகவே அதிமுக முக்கிய நிர்வாகளுடன் ஆலோசனை நடத்தினோம். திமுகவுக்கு எதிரான வாக்குகள் தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை பயன்படுத்தி நாங்கள் வெற்றி பெறுவோம். போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்போம்.
கூட்டணி கட்சி தலைவருடன் ஆலோசித்து வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறியுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் த.மா.க சார்பில், யுவராஜ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். தற்போது அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால் த.மா.க வேட்பாளர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை வருமை் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil