ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது சொந்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுகவின் கே.எஸ். தென்னரசு டெபாசிட் வாங்குவதற்கே போராடியது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் இ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேகனா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 79 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தது.
தொடர்ந்து இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சியின் இ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் இருந்தார். அதிகமான வாக்குகள் பெற்ற இ.வி.கே.எஸ். இளங்கோவன் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஓரிரு மணி நேரங்களில் தனது டெபாசிட்டை பெறும் வாக்குகளை பெற்றார்.
ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் கே.எஸ்.தென்னரசு டெபாசிட் தொகையை வாங்குவதற்கான வாக்குகளை பெற தொடக்கத்தில் இருந்தே போராடி வந்தார். பொதுவாக ஒரு தொகுதியில் பதிவாகும் மொத்த வாக்கு எண்ணிக்கையில் 6-ல் ஒரு பங்கு வாக்குகள் பெற்றால் மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப அளிக்கப்படும். அதாவது ஒரு தொகுதியில் 6 லட்சம் வாக்குகள் பதிவாகியிருந்தால் அதில் வேட்பாளர் ஒரு லட்சம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும்.
தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 6-ல் ஒரு பங்கு வாக்குகள் என்றால் ஒரு வேட்பாளர் 28 ஆயிரம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். தொடக்கத்தில் இருந்தே பின்தங்கியிருந்த கே.எஸ்.தென்னரசு 7 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 19- ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகளே பெற்றிருந்தார்.
இதனால் தனது சொந்த தொகுதியில் கே.எஸ்.தென்னரசு டெப்பாசிட் வாங்குவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அடுத்தடுத்து சுற்று வாங்கு எண்ணிக்கையில், பெரும் போராட்டத்தை சந்தித்து இறுதியாக டெபாசிட் வாங்குவதற்காக வாக்குகளை பெற்றார். தற்போது 14 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ள நிலையில், இவிகேஎஸ் இளங்கோவன் 104907 வாக்குகளும், கே.எஸ்.தென்னரசு 41666 வாக்குளும் பெற்றுள்ளனர்.
இந்த தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா மற்றும் தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஆனந்த் இருவரும் டெப்பாசிட் இழந்த நிலையில், இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெரிய வெற்றியை பெற்றுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/