ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் இன்று திடீரென குஜராத் புறப்பட்டு சென்றுள்ளார்.
தமிழகத்தின் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவெரா திருமகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மரணமடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக உள்ள நிலையில், வரும் பிப்ரவரி 27-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் வரும் ஜனவரி 31-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், ஆளும் திமுக அரசு இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. அதே சமயம் கடந்த சட்டசபை தேர்தலை பாஜக கூட்டணியுடன் சந்தித்த அதிமுக தற்போது ஒபிஎஸ் அணி இபிஎஸ் அணி என பிரிந்து இருப்பதால், இரு அணிகளும் தேர்தலில் களமிறங்க தீவிரம் காட்டி வருகிறது.
இதனிடையே நேற்று ஒரே நாளில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் இருவரும் தனித்தனியாக சந்தித்துள்ளனர். இதில் பாஜக யாருக்கு ஆதரவு தரும், இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட உள்ளதா என்ற எதிர்பார்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒ.பன்னீர்செல்வம் தனது அணி சார்பில் வேட்பாளரை நிறுத்த போவதாக அறிவித்துள்ளார். அதேபோல் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் ஆதரவு தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், ஒ.பன்னீர்செல்வம் இன்று திடீரென குஜராத் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை 8 மணிக்கு தனது ஆதரவாளர் பனோஜ் பாண்டியன் உள்ளிட்ட சிலருடன் ஒ.பன்னீர்செல்வம் குஜராத் புறப்பட்டார். அங்கு தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்க உள்ளதாக ஒ.பிஎஸ் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் இடைத்தேர்தல் தொடர்பான பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஒ.பன்னீர்செல்வம் திடீரென குஜராத் பயணம் மேற்கொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர் குஜராத்தில், அமித்ஷா உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“