ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஈவெரா திருமகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மரணமடைந்தார். இதனால் காலியாக உள்ள அந்த தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றம், இதற்காக வேட்புமனு தாக்கல் வரும் ஜனவரி 31-ந் தேதி தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் இந்த தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் இத்தேர்தலில் போட்டியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அதிமுக சார்பில், ஒபிஎஸ் தனது அணி சார்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளதாகவும், பாஜக போட்டியிட்டால் ஆதரவு தர தயார் எனறும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நேற்று ஒபிஎஸ் இபிஎஸ் இருவரும் தனித்தனியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்த நிலையில், இந்த தேர்தலில் பாஜகவின் நிலைபாடு குறித்து இரண்டு நாட்களில் அறிவி்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக ஆதரவு பெற்ற வேட்பாளரை தோற்கடிக்க வியூகம் அமைக்க ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், ஊழலுக்கும், குடும்ப ஆட்சிக்கும் அங்கீகாரம் தேடிக்கொள்வார்கள் என்பதால் மக்களை விரும்பி கேட்டுக்கொள்கிறேன். இடைத்தேர்தலில் பாஜகவின் நிலை குறித்து மாநில தலைவர் அண்ணாமலை 2 நாட்களில் அறிவிப்பார்.
இன்னும் கால அவசாகம் இருப்பதால், அதிமுகவின் இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் இணைந்து பணியாற்றலாம். பாஜக போட்டியிட வேண்டும் என்று நாடே எதிர்பார்க்கிறது. மக்களும் அதேதான் நினைக்கிறார்கள். ஊழல் ஆட்சிக்கு எதிரான மக்கள் ஒன்று திரள வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“